சங்க காலப் புலவர்கள்
7
அவருட் சிறந்தவன் கரிகால் வளவன். இவன், சேர - பாண்டி யரையும் சிற்றரசர் பலரையும் வென்று சிறந்தவன்; முன் சொன்னவாறு தொண்டை நாட்டை வென்று சோழப் பெருநாட்டை விரிவாக்கியவன்; வனது காலத்திற் சோழப் பேரரசு வடபெண்ணையாறுவரை பரவி இருந்தது என்னலாம்.
இச்சோழ வேந்தர்க்குப் 'புலிக்கொடி' உரியதாக இருந்தது. இவர்கள் ஆத்தி மாலையை அடையாள மாலையாகக் கொண்டிருந்தனர். இவர்களிடம் சிறந்த யானைப்படை, குதிரைப் படை, காலாட்படை, கப்பற்படை என்பன இருந்தன. சோழ வேந்தர் வளவர் ஆதலின், கொடையிற் சிறந்து விளங்கினர்; புலவர்களைப் புரந்து வாழ்ந்தனர்.
பாண்டிய நாடு
இது சோணாட்டின் தென் எல்லையான வெள்ளாற்றுக்கும் கன்னியாகுமரி முனைக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியாகும். இதன்கண் இன்றைய மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்கள் அடங்கும். இந்நாடு குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐவகை நிலப்பண்புகளையும் தன் அகத்தே பெற்றது. இதனில், 'வையை என்னும் பொய்யாக் குலக்கொடி' என்று புலவர் பாராட்டுதற்கு உரிய வையை யாறும், தாமிரபரணி என்னும் தண்புனல் கொண்டுள்ள பெரியாறும் பாய்ந்து நாட்டை வளப்படுத்துகின்றன. இந்நாட்டில் மலை நாட்டுப் பண்டங்களும் காட்டு நிலப் பண்டங்களும் மருதநிலப் பண்டங்களும் கிடைக்கின்றன.
நகரங்கள்
இந்நாட்டின் தலைநகரம் மதுரை. இதன் பழைய பெயர் ஆலவாய் என்பது. மதுரையிற்றான் அக்காலத்தில் புகழ்பெற்ற தமிழ்ச் சங்கம் இருந்தது. கொற்கை, காயல், தொண்டி என்பன அக்காலத்துத் துறைமுக நகரங்கள் ஆகும். கொற்கை பெரிய துறைமுகத்தை உடைய நகரமாகும். அது முத்துக்குப் பெயர் பெற்றது. முத்துகள் ரோம ராஜ்யத்திற்கு ஏற்றுமதி
செய்யப்பட்டன.