9. அரசியல்
பெருநாட்டுப் பரப்பு
மேற்குக் கரையில் கோவாவிற்குத் தெற்கே இருந்த அங்கோலா என்ற துறைமுக நகரத்திலிருந்து தார்வரர் இராயச்சூர் வழியே கிருஷ்ணையாற்று முகத்துவாரம் வரை இழுக்கப்படும் கோடு விஜயநகரப் பெருநாட்டின் வட எல்லையாகும்; தெற்கே சேரநாடு தவிர எஞ்சிய நிலப்பகுதி முழுவதும் பெருநாட்டைச் சேர்ந்திருந்தது.
மக்கள் தொகை
பெருநாடு மக்கள் தொகையை மிகுதியாகப் பெற்றிருந்தது. நிலக்கோலோ கொண்டி, அப்துர் ரஸாக், பார்போசா, பயெஸ் என்ற அயல்நாட்டு யாத்திரிகர், "விஜயநகரப் பெரு நாட்டில் மக்கள் தொகை அதிகம். நன்றாக ஆராய்ந்துபாராமல் எண்ணிக்கை கூற இயலாது. நாடெங்கும் கிராமங்களும் தனியூர்களும் நகரங்களும் நிறைந்துள,” என்று குறித்துள்ளனர்.
மூர்லண்ட் என்பவர் கணக்குப்படி
விஜயநகரப்
பெருநாட்டின் மக்கள்தொகை கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஏறக்குறைய 180 லக்ஷம் என்னலாம்.
நகரங்கள்
இராயர் காலத்தில் பெருநாட்டில் இருந்த நகரங்கள் யாவை என்பதைக் காண்போம்: மேற்குக் கரையில் அங்கோலா, மிர்ஜான், தஹானாவர், பத்கல், மைந்தூர், பாரகூர், பஸ்ரூர், மங்களூர் முதலியன; பெருநாட்டின் நடுப்பகுதியில் இராயச்சூர், ஆதவானி, ஆனெகொந்தி,விஜயநகரம்,பெனுகொண்டா,ஸ்ரீரங்கபட்டணம், துவாரசமுத்திரம், இக்கேரி, பங்காபுரம் என்பன குறிக்கத்தக்கவை;