கிருட்டிண தேவராயர்
(231
வைரச் சுரங்கம் இருந்ததென்று 1534-இல் இந்தியாவிற்கு வந்த கார்ஸிகாடிவொர்தா என்பவர் குறித்துள்ளார். அவர் தக்கணத்தில் வைரம் கிடைக்கும் இடம் வேறொன்றையும் குறித்துள்ளார். போலி வைரங்கள், புஷ்பராகக் கற்கள்
முதலியனவும் மிகுதியாகக் கிடைத்தன.
பொன் நகைகள், பொன் பாத்திரங்கள் முதலியன அரண்மனையிலும் பிரபுக்கள் இல்லங்களிலும் மிகுதியாகப் பயன்பட்டன. அரசர் கோவில்கட்குப் பெருவாரியாக நகைகளைத் தானம் செய்தார். அவர் திருக்காளத்தி ஈசுவரர்க்கு மணிகள் பதித்த மாலை, பூசைக்குரிய தங்கப் பாத்திரங்கள் முதலியவற்றைத் தானமாகக் கொடுத்தார். இங்ஙனம் அவர் கோவில்கட்குச் செய்தளித்த விலையுயர்ந்த பொருள்கள் பலவாகும். தேவதாசிகள் அணிந்திருந்த பலவகைப்பட்ட நகைகள் முன்னரே கூறப்பட்டன அல்லவா? போர் வீரர்கள் அணிந்திருந்த நகைகள் பல. கரிகளும் பரிகளும் மணிகள் பதித்த பொன் பட்டங்களை முகத்தில் அணிந்திருந்தன. அவற்றின் மீது போடப்பட்ட பட்டாடைகள் பொன் வேலைப்பாடு கொண்டவை. போர்வீரத் தலைவர்கள் பயன்படுத்திய வாள்களின் கைப்பிடிகள் மணிகள் பதித்தவை. பொது மக்களுள் ஆடவர் காதணிகளை அணிந்தனர். பெண்கள் காதணி, கழுத்தணிகள், மூக்கணி, பவளமாலை, முத்துமாலை முதலியவற்றை அணிந்தனர். வெள்ளியிலும் நகைகளும் பாத்திரங்களும் செய்யப்பட்டன.
பிற உலோகங்கள்
செம்பும் இரும்பும் மிகுதியாகப் பயன்பட்டன. இரும்பு பத்கல் என்னும் நகரத்திலிருந்து மிகுதியாகக் கொண்டு வரப்பட்டது. வாள், வேல், ஈட்டி, போர்க் கோடரி, வில், அம்பு முதலியன அக்காலப் போர்க்கருவிகள் ஆகும். விற்கள் பொன்முலாம், வெள்ளிமுலாம் பூசப்பட்டிருந்தன. விஜயநகரப் பேரரசின் போர் வீரர் பத்து லக்ஷத்துக்கு மேற்பட்டவர்; தேவைப்படின் மற்றொரு பத்துலக்ஷம் வீரர் குவிந்துவிடுவர் எனின், போர்க் கருவிகளின் எண்ணிக்கையை எவ்வாறு கூறுவது! ஆகவே, உலோகத் தொழிலாளர்க்கு எப்பொழுதுமே ஓயாத வேலை இருந்துவந்தது என்று கூறுவதே பொருத்தமாகும்.