பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

||– –

அப்பாத்துரையம் – 5

செம்பு, ஈயம், இரும்பு என்பன வீட்டுப் பொருள்கள் செய்ய மிகுதியாகப் பயன்பட்டன. விஜயநகரத்தில் செம்பு, பித்தளை, வெண்கலக் கடைகள் மிகுதியாக இருந்தன.

வாசனைப் பொருள்கள்

சந்தனம், கஸ்தூரி, புனுகு, சவ்வாது முதலிய மணப் பொருள்கள் விஜய நகரத்தில் விற்கப்பட்டன. சந்தனக் கட்டைகள் சேரநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டன. ரோஜாப் பூக்கள் நாள்தோறும் தலைநகரத்தில் விற்கப்பட்டன. அவற்றை விற்கும் கடைகள் மிகப் பலவாக இருந்தன. ரோஜா மலரை அரச குடும்பத்தினரும் பெருமக்களும் மிகுதியாகப் பயன்படுத்தினர்; நீராடிய பிறகு சாம்பிராணிப் புகை, அகிற்புகை இவற்றைக் கூந்தலுக்கு ஊட்டினர்.

தொழிலாளர் கூலி

வேலையாள் வேலை தொடங்குமுன் வேலை தந்தவர் வீட்டில் உண்பான்; வேலை முடிந்தபிறகு ஒரு பணம் பெற்று மீள்வான். அக்காலக் குதிரைச் சேவகர், குதிரையைப் பழக்குவோர், வண்ணார், தச்சர், கொல்லர் முதலிய அரண்மனைப் பணியாளர் பலர் அன்றாடம் கூலி பெற்றனர். அரண்மனைக் கணக்கன் அரண்மனை வெளிவாயிலில் இருந்து அவர்கட்குக் கூலி தருதல் வழக்கம்.

அயல்நாட்டு வாணிகம்

'கிருஷ்ணதேவராயர் காலத்துக்கு முன்வரை அயல் நாட்டு வாணிகம் அராபியர், அபிசீனியர், மூர் வகுப்பார் முதலிய முஸ்லிம்கள் கையில் இருந்தது; ஆனால் இராயர் காலத்தில் போர்ச்சுகீசியர் குதிரைகளையும், முத்துக்களையும், கண்ணாடிப் பொருள்களையும் விஜய நகரப் பெரு நாட்டிற்குக் கொண்டுவந்து வாணிகம் செய்தனர்; பெருநாட்டிலிருந்து அரிசி, ஆடை, சர்க்கரை, இரும்பு, வாசனைப் பொருள்கள் முதலியவற்றை வாங்கி அயல்நாடுகட்குக் கொண்டு சென்றனர். பஸ்ரூர், பாரகூர், மங்களூர் இவற்றிலிருந்து அரிசி மலையாளநாடு, மாலத்தீவுகள், ஏடன் முதலிய இடங்கட்குக் கொண்டு செல்லப்பட்டது. இரும்பு பத்கல் நகரத்திலிருந்து மலையாளத்துக்குக் கொண்டு