(246)
அப்பாத்துரையம் - 5
கலையாராய்ச்சிக்குரிய விதி அமைதியும், இலக்கணமும், அந்நாட்டின் கலை இலக்கியத்தை- கலைப்படைப்பைப் பின்பற்றி அமைந்திருந்தது என்பதே. இலக்கியங் கண்டதற்கே இலக்கணம் அமையமுடியும் என்ற பண்டைத் தமிழர் நுண்கருத்தை உணராமல், அவர்கள் தம் இலக்கணத்தின் அமைதி கொண்டு கீழ்நாட்டுக் கலையை அளக்க முற்பட்டனர்.
எடுத்துக்காட்டாக, மேனாட்டுக் கலைஞர் தம் கலைப்படைப்புக்களைத் திரைச் சட்டத்தில் (canvas) அல்லது அட்டைச் சட்டத்தில் (board) தீட்டுவர். அதில் தம் பெயரைப் பெரும்பாலும் பொறிப்பர். அவற்றில் தத்தம் தனித்திறங்களை வற்புறுத்திக் காட்டுவர். இதனால் கலைஞருக்குத் தக்கபடி கலையும் வேறு வேறு வகைப்பட்டதாய் அமைந்தது.
ஆனால், கீழ்நாட்டிலோ ஓவியங்கள் கல்லிலும், சுவரிலும் மட்டுமே தீட்டப்பட்டன. கலைஞன் பெயரோ, தனித்திறமோ வெளிப்பட வழியில்லை. பெரும்பாலும் கலையிலக்கணத்தின் கட்டுப்பாடு காரணமாக, கலைஞர் திறமை ஒன்று நீங்கலாக, வேறு எந்தப் பண்புவேறு பாட்டுக்கும் வழி இருப்பதில்லை. எனவே, மேனாடுகளில் ஒரே காலத்தில், ஒரே இடத்தில் உள்ள இரண்டு கலைஞர்களின் பண்பு வேறுபாட்டைக் கூட, கீழ்நாட்டில் இரு வேறு காலங்களில் இருவேறு இடங்களிலுள்ள இரு மரபுகளிடையே காண்பது அரிது.
கீழ்நாட்டுக்கும் மேல்நாட்டுக்கும் நாகரிகத் துறையிலும், கலைத்துறையிலும் உள்ள வேறுபாடுகளைப்போலவே, வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும் இரண்டிலும் வேறுபாடு உண்டு. எடுத்துக்காட்டாக, இலக்கியத்துறையில் தென்னாட் டிலக்கியங்கள் வடநாட்டிலக்கியங்களைக் காட்டிலும் பழமையும், வளமும்,பரப்பும், தனிப்பண்பும் உடையவை என்று காணலாம். மேலும் தமிழில் பிற்கால இலக்கியத்தையும், சங்க இலக்கியத்தை யும் ஒப்பிட்டுக் காண்போர், பின்னதன் கலவைப் பண்பையும் முன்னதன் தனிப்பண்பையும் வேறு பிரித்துக் காணக்கூடும். இலக்கியத்திலுள்ள இவ்வேறுபாடே நாகரிகத்திலும் கலையிலும் பண்பிலும் உள்ள வேறுபாட்டை நன்கு குறித்துக் காட்டுகின்றது. சங்க இலக்கியம் இயற்கையோடும் வாழ்வோடும் ஒட்டியது. சமயக் கருத்துக்களுடைய தாயினும், சமயச் சார்பற்றது.