பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓவியக் கலைஞன் இரவிவர்மா

(249

திறமும் கெட்டழிந்த பின்னர், வடநாட்டின் இடைக்காலச் செயற்கை மரபாகிய கற்பனை மரபு புகுந்தது என்னலாம். இடைக்கால மரபாகிய இதனையே இந்தியாவின் பண்டை மரபு எனக்கொண்டு, வடநாட்டார் இன்று தாமும் குழப்பமுறு கின்றனர்; உலகின் பொது அறிவையும் குளறுபடி செய்கின்றனர்.

இரவிவர்மாவின் சிறப்பு மேற்கூறிய வரலாற்று அடிப்படையிலேயே நன்கு விளங்கத்தக்கது. ஆனால், வரலாற்றுச் சார்பற்ற தனிச்சிறப்புக்களும் அவருக்கு உண்டு. உயிரோவியங்கள் வகையில், அதாவது, தனிப்பட்ட மனிதரைப் பார்த்து வரையும் படங்கள்வகையில், அவர் மேனாட்டாராலும், கீழ்நாட்டாராலும் ஒருங்கே போற்றப்படுகிறார். வங்க மறுமலர்ச்சி இயக்கத்தின் புனைவியல் கலையிலேயே மூழ்கி, அதுவே இந்தியாவின் பண்டை மரபு எனத் தருக்கி, இரவிவர்மாவின் பெயரையே இருட்டடிக முயலும் வடவர்கூட, இத்துறையில் அவர்பெற்ற மேம்பாட்டை ஒத்துக் கொள்ளா திருக்கமுடியவில்லை. இரவிவர்மாவுக்குக் கலைப் பயிற்சியில்லை என்றும், இந்தியமரபை அவர் கவனிக்கவில்லை என்றும், ஆகவே அவர் அருங் கலைத்திறனற்றவர் என்றும் இவர்களில் சில 'கலைவல்லுநர்’ பத்திரிகைகளில் எழுதுவதுண்டு. அவர் மக்களிடையே பெற்ற செல்வாக்குக் கண்டு அவர்கள் பொறாமையுற்றனர். ஆனால், இவர்கள்கூட அவர் இந்தியக் கலையுலகுக்குத் தந்த விழிப்பையும்; உயிரோவியக்கலை, நெய்வண்ணக் கலை ஆகிய தனித்துறைகளில் அவர் அடைந்த மேம்பாட்டையும் ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியில் குறிப்பிட்ட நெய்வண்ண ஓவியத்துறையை மேல்நாட்டிலிருந்து கீழ் நாட்டுக்குக் கொண்டுவந்தவர் இரவிவர்மாவின் குடிமரபில் அவருக்கு முற்பட்ட அவர் முன்னோருள் ஒருவரே என்று அறிகிறோம். ஆனால், இரவிவர்மா அதனை முற்றிலும் தமதாக்கி,அதில் ஒப்பற்ற முதன்மை பெற்றார். அவர் கலைப்படைப்புக்களில் மிகப் பெரும் பாலானவை நெய் வண்ணங்களே. பிற்காலங்களில் அவர் நீர்வண்ணத் துறையில் கருத்துச் செலுத்தி அதனையும் பயின்றார். அதிலும் அவர் பேரளவு தேர்ச்சியும் திறமும் காட்டினார்.