பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நாடும் மரபும்

பண்டைத் தமிழ் மன்னரிடையே சேர,சோழ, பாண்டியர் என்ற முப்பெரு மரபினர் இருந்தனர். இன்றைய மலையாள நாட்டின் பெரும் பகுதி இம் மும்மரபினர் நாடுகளுள் சேர நாட்டைச் சேர்ந்தது. ஆயினும் திருவாங்கூரின் பெரும்பகுதி சேர நாட்டுடனும் பாண்டிய நாட்டுடனும் ஒருங்கே தொடர்புடைய ய தாய் இருந்து வந்துள்ளது. பிற்காலத்தில் சேரப் பேரரசர் ஆட்சியில், அது சேர நாட்டுடன் தொடர்புகொண்டு, சேரநாட்டுப் பகுதியாகக் கருதப்பட்டது இயல்பே.ஆனால் கி.பி. முதல் நூற்றாண்டில் தமிழகம் பற்றிக் குறிப்பிட்ட கிரேக்க நூலார் கொல்லம் வரையுள்ள பகுதியைப் பாண்டிய நாட்டுப் பகுதி என்றே குறித்துள்ளனர். அதற்கேற்ப இன்றளவும் திருவாங்கூரின் தலைநகரான திருவனந்தபுரம் தென் திருவாங்கூரிலேயே இருக்கிறது.

ஒரு நூற்றாண்டுக்குமுன் மார்த்தாண்ட வர்மா காலத்தில் தான் தலைநகரம் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. அதற்குமுன் இன்னும் தெற்கில் தமிழ்த் திருவாங்கூரிலுள்ள பத்மநாபபுரத்திலும், அதற்கு முற்பட்ட நாகர்கோவிலை யடுத்த திருவிதாங்கோடு அல்லது திருவதங்கோட்டிலும் தலைநகர் அமைந்திருந்தது. திருவிதாங்கோடு நீண்ட காலம் தலை நகரமாயிருந்ததினால்தான் நாட்டின் பெயர் திருவாங்கூர் என்றாயிற்று என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், மலையாள மொழியில் திருவாங்கூரின் பெயர் இன்னும் திருவிதாங்கூர் என்றே எழுதப்படுகிறது. இதுவே தொல்காப்பியம் கேட்ட அதங்கோட்டாசான் ஊர் என்று ஆராய்ச்சியாளர்கள் பலர் கருதுகின்றனர்.

இத்துடன் திருச்செந்தூர் வரையிலும் உள்ள பகுதி மார்த்தாண்ட வர்மா காலம்வரை திருவாங்கூரில் சேர்ந்திருந்த