சங்க காலப் புலவர்கள்
11
எனப்படுவர். ஒவ்வொரு பேரரசன் நாட்டிலும் சுயாட்சி பெற்ற குறுநில மன்னர் இருந்து வந்தனர். ஒரு சிலர் தம் பேரரசன் வேறொரு பேரரசனைத் தாக்குகையில்,தம் பேரரசன் சார்பில் நின்று போர்புரிவர். தனிப்பட்ட சிற்றரசர் இருவர், ஒருவருக் கொருவர் போரிடலும் உண்டு. இக்குறுநில மன்னர் கொடையிற் சிறந்த வள்ளல்களாக விளங்கினமை கவனிக்கத்தக்கது. இவர்கள் கொடுத்தலில் வெறி கொண்டவர்; அளவறிந்து கொடுத்திலர். இவ்வாறு இவர், தம்மை நாடிவந்த பாணர், விறலியர், பொருநர், புலவர் முதலியோர்க்கு அவரவர் தகுதிக்கேற்ப அளித்து இயல் - இசை - நாடகம் என்ற முத்தமிழையும் முழுமனத்துடன் வளர்த்து வந்தனர்.
சங்க கால வள்ளல்கள்
நெடுநில மன்னரும் குறுநில மன்னரும் தம் தாய்மொழியைப் பேணும் முயற்சியில் தளர்ந்தவர் இல்லை. எனினும், வரையாது அளித்தலில் முடிமன்னரைவிடச் சிற்றரசரே சிறந்து விளங்கினர். அச்சிற்றரசர் மேற்கூறப்பெற்ற சங்க காலத்தில் பலராக விளங்கினர். அவருள் பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், ஆய், நள்ளி, குமணன் என்பவர் சிறந்தோர் ஆவர். பாரி என்பவன் பாண்டிய நாட்டில் பறம்புமலை'யைத் தலைநகராகக் கொண்ட பறம்பு நாட்டை ஆண்டவன். அவன் நாடு முந்நூறு ஊர்களைக் கொண்டது. அவனது அவைப் புலவர் கபிலர் என்பவர் காரி என்பவன் தென் ஆர்க்காடு ஜில்லாவில் உள்ள திருக்கோவிலூரைத் தலைநகராகக் கொண்ட மலை நாட்டை ஆண்டு வந்தவன். அதனால் அவன் 'மலையமான்' எனப்பட்டான் அவன் சிறந்த போர் வீரன்; கொடை வள்ளல். ஓரி என்பவன் சேலம் ஜில்லாவில் கொல்லிமலைப் பகுதியை ஆண்டவன். அவன் சிறந்த வள்ளல் சிறந்த வில்லாளி; அதனால் 'வல்-வில்-ஓரி' எனப் பெயர் பெற்றான். அதிகன் என்பவன் முற் சொன்ன சேலம் ஜில்லாவில் தகடூர் நாட்டை ஆண்டு வந்தவன்; அஞ்சாத பெருவீரன்; வரையாது வழங்குவதிலும் சிறந்தவன். அவன் ‘அதியமான்’ என்றும் கூறப்பட்டான். அவன் வரலாற்றை ஒளவையார் பாடல்களால் அறியலாம். பேகன் என்பவன் மதுரை ஜில்லாவில் பழநிமலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். பழநியில் இன்றும் ஆய்க்குடி(ஆவிக்குடி) என்னும் சிற்றூர் இருக்கின்றது. அவனைப்