ஓவியக் கலைஞன் இரவிவர்மா
263
கலையும் பண்பாடும் அளித்தது அதுவே. இதனைத் தமிழிலக்கியம் மட்டுமன்றி வடமொழி இலக்கியமும் பெரிதும் பாராட்டுகிறது. இம்மலையின் புகழ்ச்சுவடு வடமொழி இலக்கியத்தில்கூடப் பதிந்தேயுள்ளது. மலையமலை என்ற வடமொழிப் பெயருடன் அது காளிதாசன் போன்ற வடமொழிக கவி மணிகளால் பராவப்பட்டுள்ளது. வேனிலும் தென்றலும் தண்ணறும் சந்தனமும் தமிழ் பிறந்த இம்மலையிலேயே தோன்றின என்பதை இவ் வடமொழி வாணர்சாற்றுகின்றனர். இதனாலேயே வடமொழியில் வேனிலான் அல்லது மன்மதன் மலயராஜன் என்றும், தென்றல் மலயமாருதம் என்றும், சந்தனம் மலயஜம் என்றும் வழங்குகின்றன.
இம்மரபை வடநாட்டு மொழிகள் யாவுமே இன்றுவரைப் பேணித்தான் வருகின்றன. ஆனால், மலயம் என்பது தமிழும் தாமிரவருணியும் பிறக்கும் பொதிகை என்ற செய்தி இன்று வடநாட்டவர் காதில்படாது மறைக்கப்பட்டு வருகிறது. அது தெரியவரும் காலத்தில் படிப்படியாகத் தென்னாட்டைப் பற்றிய வடவரின் புறக்கணிப்பும், அறியாமையும் குறையும். வட நாட்டின் கலவைப் பண்புகளிடையே அதன் மூலமுதற் பண்பின் கருவூலங்களான தமிழ்ச் சங்க இலக்கியத்தையும் பிற தென்னாட்டுக் கலை மரபுகளையும் அறியும் வாய்ப்பும் அன்றுதான் இந்திய மாநிலத்துக்கும் கீழ் நாடுகளுக்கும் ஏற்படும்.
இரவிவர்மாவின் கலை மலையாளத்தின் தென்றலாய், அதன் நறுமணச் சந்தனமாய், இந்தியாவின் கலை மரபிடையே மணம் வீசத்தக்கது. பாண்டியர் மரபும் பொதிகை மலை ஆய் மரபும் வடமலையாறச் சேர மரபும் கலந்து வீசும் அவர் கலைத்தென்றல் இடைக்காலப் போலிக் கலை மரபுகளின் மயக்கம் ஒழித்து, தென்னிந்தியாவின் சிறப்புக் கலைமரபாகவும் இந்தியாவின் சிறந்த கலைமரபாகவும் இடம்பெறும் நிலையை நாளடைவில் உண்டு பண்ணும் என்று உறுதியாக நம்பலாம்.