3. பயிற்சிப் பருவம்
இரவிவர்மா 1848 ஏப்ரில் 29-ம் நாளன்று கிளிமானூர் மரபினரின் பண்டைப் புகழ்பெற்ற அரண்மனையிற் பிறந்தார். அவர் அன்னை உமா அம்பாபாய் ஆவர். அவர் கல்வி கேள்விகளில் மலையாள நாட்டின் தலைசிறந்த பெண்களுள் ஒருவர். இசைச் சுவைத் திறத்திலும் இசையறிவிலும் அவர் மேம்பட்டவராயிருந்ததுடன், தாய்மொழியாகிய மலையாளத் திலும் அரும்புலமை யுடையவராயிருந்தார். சில மலையாளக் காப்பியங்களையும் அவர் இயற்றியுள்ளார் என்று அறிகிறோம். இத்தகைய கலைத்திறம் படைத்த அன்னையாரின் சிறப்பு. மகனாகிய இரவிவர்மாவிடத்திலும் மற்றொரு மகனாகிய இராஜராஜ வர்மாவிடத்திலும் ஓவியத்திறமையாகப் பொலிவுற் றது. இரவிவர்மாவின் உடன்பிறந்த நங்கையாரிடத்தில் இவ் அன்னை யாருடைய ஓவியத்திறமையும் இசைத் திறமையும் ஒருங்கே குலவின.
இரவிவர்மாவின் தந்தை ஏழுமாவில் பட்டாதிரி என்ற ஒரு நம்பூதிரிப் பார்ப்பனர். மன்னர்குடிப் பெண்டிர் கிளிமானூர்த் தம்பிரான் போன்ற தம்பிரான் குடியில் மணம் செய்துகொள்வதுபோல, தம்பிரான் குடிப் பெண்டிர் நம்பூதிரி மரபிலேயே மணம் கொள்ளுதல் மலையாளநாட்டு மரபு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஏழுமாவில் நம்பூதிரி வைதிகப் பற்றுடையவர். நம்பூதிரிகளுக்கு இயல்பான பெரும்புலமையு முடையவர்.
இரவிவர்மாவுடன் பிறந்தவர்கள் அவர் நீங்கலாக இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் ஆவர். இரவிவர்மாவே மூத்த பிள்ளை. குடும்பத்தில் கலைமரபு பொங்கிவழிந்தபோதிலும், அவர் பெற்றோரும் உற்றோரும் அவர் பால் கொண்டிருந்த பேரவா வேறு வகையாயிருந்தது. அவர்கள் அவரை வடமொழிப்