ஓவியக் கலைஞன் இரவிவர்மா
(271
மாவேலிக்கரை அரசர் குடிமரபிலுள்ள ஒரு கன்னியை மணம் புரிந்து கொண்டார். அந் நங்கையார் அந்நாளைய மூத்த பட்டத்திற்குரிய அரசியின் தங்கையாகவும் இருந்தார். இதன் மூலம் மன்னருடன் இரவிவர்மா முன்னிலும் நெருங்கிய நேரடியுறவினரானார். இதுமுதல் அவர் கலைஞராக மட்டுமன்றி மன்னரின் சிறந்த தோழராகவும் மன்னவையில் தலைசிறந்த ஓர் உறுப்பினராகவும் அமைந்தார். அவருக்கென இதுமுதல் அரண்மனையிலேயே கலைக்கூடம் ஒன்று அமைத்துத் தரப் பட்டது. அது மட்டுமன்று. அவர் வாழ்க்கைத் துணைவியின் தமக்கையரான மூத்த உரிமை அரசியின் கணவரே தற்கால மலையாள மொழியின் தந்தையாரான கேரளவர்மா வலியகோயில் தம்பிரான் ஸி.எஸ். ஐ.ஆவர். இங்ஙனம் 19-ம் நூற்றாண்டில் திருவாங்கூர் அரச குடும்பமாகிய கொடியில் பூத்த அரசுரிமைக்குரிய இரண்டு மலரணங்குகளையும் அந்நூற் றாண்டின் இரண்டு கலைக்கோமான்களாகிய கேரளவர்மாவும், இரவிவர்மாவும் துணைவியராகக் கொள்ளும் அரும்பேறு ஏற்பட்டது.
திருவாங்கூர் அரசமரபின் தற்போதைய அரச உரிமை யாளரான சித்திரைத் திருநாள் இராமவர்மா, நம் இரவி வர்மாவின் திருமண வாழ்விலிருந்து தோன்றிய மரபுக்கொடியில் இரண்டாவது தலைமுறைக்குரிய ஆண்மரபினர் ஆவர். அவர் தந்தை இரவிவர்மாவின் ஒரு மருமகன். அத்துடன் அவர் பெரியன்னையாரான மூத்த பட்டத்தரசி அவர் புதல்வியின் புதல்வி. இங்ஙனங் கலைக்கோமான் மரபு அரசுரிமைக் கோமான் மரபாகவும் வளர்ந்துள்ளது.