பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓவியக் கலைஞன் இரவிவர்மா

(279

இரவிவர்மா மைசூருக்குச் சென்று மூன்று மாதம் தங்கி அந்நாட்டுக் காட்சிகளைப் பார்வையிட்டார். திருவாங்கூரையும் மலையாளத்தையும் போலவே அந்நாடும் மலைநாட்டின் இயற்கைக் காட்சிகளுக்குப் பேர்போனது. மலையத்தின் வடதிசைத் தொடர்ச்சியான குடகு மலையிலிருந்து பொன்கொழிக்கும் பொன்னியாறு பிறக்கும் பகுதி வடகொங்கு அல்லது கங்கநாடாகிய இம்மைசூரே ஆகும். இந்நாட்டுக் காட்சிகளில் பலவற்றைக் கலைமன்னர் வரைந்து காட்டினார். அத்துடன் மன்னர், மன்னர் குழந்தைகள் ஆகியவர்களின் உயிரோவியப் படங்களையும் அவர் பண்பமையத் தீட்டினார்.

திருவாங்கூர், மைசூர் ஆகிய நாடுகளுடன் 'முன் மாதிரி' நாடு என்ற பெயருக்குப் போட்டியிடும் பெருமையுடையது பரோடா நாடு. அதன் மன்னர் கெய்க்வார் என்னும் மரபுப்பட்டம் உடையவர். மைசூர் மன்னரைப்போலவே அவரும் இரவிவர்மா வின் கலைப்புகழைக் கேள்வியுற்று அவருக்கு அழைப்பு விடுத்தார். மன்னர் அப்போது ஒரு புதிய அரண்மனை கட்டியிருந்தார். அதன் கூடங்களைக் கலைஞன் இரவிவர்மாவின் கை வண்ணங்களாலேயே முழுதும் அழகுபடுத்த அவர் திட்டமிட்டார். அத்துடன் படங்களும் இராமாயண மகாபாரதக் காட்சிகளாகவே இருக்கவேண்டுமென்று அவர் விரும்பினார். மன்னன் இரவிவர்மா இப் பாரிய திட்டத்தின் பொறுப்பை ஏற்றார்.

முற்கால மன்னர், மக்கள் தோற்ற நடையுடைகளைக் கூடியமட்டும் இக்கால மன்னரிடமிருந்தே தேர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டுமென்பது இரவிவர்மாவின் கோட்பாடு. அதற்கிணங்க அவர் மாளவம், இராஜபுதனம், தில்லி, ஆக்ரா, லாகூர், காசி, அலகாபாத், கல்கத்தா முதலிய பல வடநாட்டுப் பகுதிகளுக்கும் சென்றார். மாநிலமுழுமைக்கும் பொதுவான காவியங்களின் கற்பனைக்குரிய பண்புகளை அவர் மாநில முழுமையிலு மிருந்தே தேர்ந்தெடுத்தார்.

இச் சீரிய கருத்து யாவராலும் போற்றத் தகுந்தது. இந்தியாவின் பண்டைப் பண்புகளைக் காத்த இராஜபுத்திர மன்னர் பண்டைப்புராண இதிகாச மன்னர் தோற்றச் சூழல்களுக்குப் பெரிதும் முன்மாதிரியாயினர். அழகிற் சிறந்த