ஓவியக் கலைஞன் இரவிவர்மா
உ
285
அது இலக்கியமாகத் திகழத் தகுந்தது. செப்பிற் கடைந்த உருவைவிடத் திரண்டு அந்தசந்தமான உறுப்புக்கள்; சிலை வார்ப்பவனால்கூட உருவாக்க முடியாத நுண்ணிய ஒயில்; ஊஞ்சலின் ஓட்டம்; மங்கையின் ஆட்டம்; அவள் உள்ளத்தில் தோன்றி முகத்தில் ஒளிவிடும் ஒய்யாரப் பார்வை ஆகிய எல்லாம் புறத்தோற்றமாக அன்றி, அகத் தோற்றமாகவே நம்முன் காட்சியளிக்கின்றன.
இரவிவர்மாவின் தலைசிறந்த படங்களில் "மோகினி" ஒன்றென எவரும் ஒப்பத்தயங்க மாட்டார்கள். பொது மக்கள் இல்லங்களையும் மன்னர் கோமக்கள் மாடங்களையும் ஒருங்கே அழகுபடுத்தும் கலைப்படைப்புக் களுள் ஒன்றாக அது இன்றும் ம் பெற்றுள்ளது. என்றும் இடம்பெறத் தக்கது.
'மோகினி'யைப் போலவே 'நாண்மடம்' 'செருக்கு' ‘பகற்கனா' ‘வழிபாடு' ஆகிய பண்புகளைப் பண்பிகள் வாயிலாக இரவிவர்மா நன்கு எடுத்துக் காட்டியுள்ளார். இவற்றுட்கடைசிப் படமான 'வழிபாடு'ம் புராணப் படங்களில் ஒன்றான ‘அன்னத்தைத் தூதுவிட்ட தமயந்தி'யும் அதே வகையில் சாதனாபோஸ் முதலிய வங்கப் புதுமலர்ச்சி இயக்கத்தார் படைப்புக்களுடன் ஒப்பிடத்தக்கவை ஆகும்.
வங்கக் கலைக்கு ஒரு தனியழகுத் திறம் உண்டு என்பதில் தடையில்லை. மனிதரை மறைத்து மனிதப் பண்பையும், கதையை மறைத்துக் கதைப் பண்பையும், உலக வாழ்க்கையை மறைத்து அதின் அரிய உணர்ச்சி களையும் கலைக்குறியீட்டுக் குறிப்புகளின் உதவியால் அவை எடுத்துக் காட்டுவது உண்மையே. ஆனால், உணர்ச்சி காட்டும் கலைக்குக் கலையுலகில் எவ்வளவு இடமுண்டோ, அவ்வளவு உணர்ச்சிக் கனிவுடன் பொருளையும் காட்டும் கலைக்கும் கட்டாயம் இடமுண்டு. முன்னது சமயத்துறையில் பக்தி போன்றது. பின்னது அதே துறையில் நல்லெண்ணம், நல் ஒழுக்கம், நல்வாழ்வு போன்றது. கலைஞன் கண்ணுக்கு முன்னது சிறக்கலாம்; ஆனால், வாழ்க்கைக் கலைஞன் அல்லது அறிஞன் கண்ணுக்கு அது பின்னதன் நிழல் போன்றதே. பொருளைப் படம் பிடிக்காமல் நிழலைப் படம் பிடிக்கும் கலை அருமையான செப்பிடு வித்தையாகப் பயன்படலாம். ஆனால், அது அழகின் நிலையான பண்பாகப் பயன்படமாட்டாது.