ஓவியக் கலைஞன் இரவிவர்மா
287
யாற்றினாரேயன்றி வாழ்வில் மிகுதி அக்கரை காட்டவில்லை. தற்பற்றொழித்துக் கலைக்கென வாழ்வை ஒப்படைத்த கலைத் துறவியாகவே அவர் வாழ்ந்து வந்தார். இந் நிலையில், குடும்பக் கவலைகள் ஒன்றன் மீதொன்றாக அவர்மீது வந்தடுக்கின. இவை தாங்காமல் துன்புறுகையில், நீரிழிவு நோய் அவரை உள்ளூர நின்றரித்தது.
அவர் கலந்துகொண்ட கடைசிக் குடும்ப விழா சித்திரைத் திருநாள் இராமவர்மா அரசரின் பெரியன்னையாரான அவர் பேர்த்திக்கும் அவர் மைத்துனர் கேரளவர்மா வலிய கோயில் தம்பிரான் மருமக்களுள் ஒருவருக்கும் நடைபெற்ற திருமண விழாவேயாகும். அதன்பின் நீரிழிவு நோயுடன் தொடர்புறவு கொண்ட புற்றுநோய் ஒன்று அவர் வாழ்வில் தலை காட்டிற்று. அதுவே அவருக்குக் கூற்றுவனனுப்பிய முடங்கலாய் அமைந்தது. 1906-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் நாள் தம் 58-வது வயதில் கலை மன்னன் இரவிவர்மா காலமானார்.
கலையுலகைக்
கலை மன்னன் மறைவு கலை யுலகைக் கலக்கிற்று. கலைஞர், கலை ஆர்வலர் முகங்களிலெல்லாம் துயர்நிழலின் கோடுகள் படிந்தன. திருவாங் கூரும் திருவாங்கூர் மன்னர் குடியும் மாளாத் துயருள் மூழ்கின. இந்தியாவின் முன்னணிக் கலைஞரும், தென்னாட்டின் மன்னர் குடிப்பிறந்த மக்கட் கலைஞருமாய் விளங்கிய அவர் மறைவால் ஏற்பட்ட குறைபாடு இன்னும் நிறைவுபடுத்தப் பெறாமலே உள்ளது. இன்று தென்னாட்டில் அவர் குடும்ப மரபின் கலைப்பயிரும் நாட்டுக் கலைமரபும் வளரத் தான் செய்கின்றன. வடபால் வங்கக் கலையின் நிலவொளி எங்கும் பரவி மாயஒளி திகழத்தான் செய்கிறது.ஆயினும் இரவிவர்மாவை ஒத்த ஒரு பெருங்கலைஞன்- கலைவானில் கீழ்திசையில் ஒளிரும் கதிரவன்போன்ற கலைஞன்- முன்னும் இருந்ததில்லை; இன்னும் இலங்கக் காணோம்!
கிட்டுதற்கரிய கலைமணியைத் திருவாங்கூர் தென்னாட்டுக்குப் பெற்றுத் தந்தது. அதன் ஒளியும் மணமும் புகழ் மணியோசையும் தான் இன்று மீந்துள்ளன. அவர் புகழிசை நின்று நிலவி அவர் போன்ற கலைஞர்களைப் படைத்தளிக்கட்டும் என்று மனமார அவாவுகிறோம்.