பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓவியக் கலைஞன் இரவிவர்மா

289

கலைஞர் கோமான் தோற்றத்தில் அந்தசந்தமானவர். கட்டமைதி யுடைய நெடிய உருவத்தினர். மன்னர் மரபின் வீறும், பெருமக்கள் பண்பும் நயமும் அவர் உருவில் மயிர்க்கால்தோறும் நிரம்பி வழிந்தன. நடையுடையும் வாழ்க்கை முறையும் இதற்கேற்ப மன்னர் வீறும் கலைஞன் எளிமையும் ஒருங்கே உடையவையாயிருந்தன.

'வாய்மை என்பது அழகே: அழகே வாய்மை' என்றார் ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ். ஆனால், 'கலை, கலைக்கே' என்று கூறும் கலைஞருட் பலர் இயற்கை கடந்தும், மனித வாழ்வின் வாய்மை கடந்தும் அழகைக் காண விழைவர். தற்கால வங்கக் கலைஞர் இத்தகைய மாயஅழகையே நாடுகின்றனர். அத்தகைய அழகுக் கலையே நாட்டுக் கலை மரபு என்றும் அவர்கள் கொள்கின்றனர்.

அவர்கள் அழகை நாடிப் பெருமுயற்சி செய்யாமலில்லை. ஆனால், அவர்கள் நாட்டமும் முயற்சியும் புற உலகிலன்று; தங்கள் உள்ளத்திலுள்ள அக உலகிலேயே. அக உணர்ச்சிகளைப் புறத்தே வண்ணத்தில் தீட்ட அவர்கள் முயன்றனர். இதனை உணர்ச்சிக் கலை என்றும் மறைநிலைக் கலை என்றும் அகநோக்குக் கலை என்றும் கூறலாம். கலைத்துறையில் இது ஒரு சிறந்த நேரிய பகுதி என்று கொள்ளத் தடையில்லை. ஆனால், அவர்கள் இதுவே கலை, இதுவல்லாதது கலையன்று என்று கூறும் போது அவர்கள் நோக்கு குறுநோக்காகிறது.

உடலின் சிறந்த பகுதி தலை, யானையின் தனிச்சிறப்புத் தரும் பகுதி தும்பிக்கை என்று கூறினால் யாரும் தடைசொல்ல மாட்டார்கள். ஆனால் தலையே மனிதன் தும்பிக்கையே யானை என்று கூறினால் இது அரைகுறை உண்மை என்றே யாவருங் கூறுவர். தலையை மட்டும் கண்டால் மனிதன் என்றும், தும்பிக்கையை மட்டும் கண்டால் நாம் யானை என்றும் கூறமுடிவது உண்மையே. ஆனால் இது குறியீட்டுக் கலை மட்டுமே; முழுக் கலையல்ல. செய்தித் தாள்களில் வரும் கேலிச் சித்திரங்கள் இத்தகு சிறப்புப் பண்பு பெருக்கியே சுவை பயக்கின்றன. இதனால் அது ஒன்றே கலை என்று கூறமுடியாது. முனைப்புக் குறியீட்டுச் சித்திரங்கள் கேலிச் சித்திரமாகவும் குறியீட்டுக் கலையாகவும் ஆகமுடியுமே தவிர, கலை முழுவதையும் குறிக்க முடியாது.