292 ||
அப்பாத்துரையம் - 5
வங்கக்கலையும், இரவிவர்மாவின் கலையும் கீழ்நாட்டின் இருவேறு கலைமரபுகள். அவை ஒன்றுடனொன்று ஒப்பிடத் தக்கவை அல்ல. பிரித்தறிந்து தனித்தனி பாராட்டத்தக்கவை. வங்கக்கலை புராணங்களிலிருந்தும், சமயத்திலிருந்தும் வாழ்க்கையை அறவே பிரித்தது. வாழ்க்கை கடந்த, மனிதப்பண்பு கடந்த உயர் உணர்ச்சிகளை மட்டும் கலைமரபுப்படி தீட்டி க் காட்டிற்று.ஆனால், இரவிவர்மாவோ வாழ்க்கையை அப்படியே ஒருபுறம் தீட்டிக்காட்டினார்; அதன் அழகை முனைப்பாகக் காட்டினார். அத்துடன் இந்தியர் வாழ்க்கைத் தொடர்பு குன்றிய புராணங்கள் வட மொழிக் காவியங்களைக்கூட இந்தியர் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி அவர் அவற்றுக்கு மனிதப் பண்பு ஊட்டினார்.
-
விஞ்ஞான ஊழியில் இந்திய மக்கள் வாழ்வுடன் தொடர் பற்றுவந்த புராணங்களுக்குத் தம் கலைமூலம் இரவிவர்மா உயிர்கொடுத்தார். பகுத்தறிவுக் காலங்களில் மதிப்பிழந்த உயிரிழந்த தெய்வங்களுக்குக் கலை மூலம் உருவும் பண்பும் தந்தார். இங்ஙனம் சமயத்துக்கும் சமயஞ் சார்ந்த கீழ்நாட்டின் டைக்காலப் பண்புக்கும் உண்மையில் அவர்செய்த சேவை சிறிதன்று. ஆயினும், இந்தியாவின் பண்பென்று வடஇந்தியர் கொள்ளும் பண்புக்கூறுகளுக்கு அவர் இவ்வளவு தொண்டாற்றி யிருந்தும், அவர்கலை இந்திய மரபில் வந்ததன்று எனத் தவறாக ஒதுக்கப்படுவது இந்திய அறிவுலகின் ஒரு புதிரேயாகும். அவர் பெருமையை நாட்டச் சமயஞ் சார்ந்த புராண ஓவியங்கள் தேவையில்லை. ஆனால், இந்த ஓவியங்களே அதற்குச் சான்று பகரப் போதியன.
இரவிவர்மாவின் கலைக் கற்பனை அழகுவாய்மையில் வேரூன்றி வாய்மை கடந்தது என்பதனை அவர் புராணப் படங்கள் நன்கு காட்டும். இரவிவர்மாவின் ‘அன்னத்தைத் தூதுவிட்ட தமயந்தி'யுடன் நந்தலால் போஸின் 'ஹம்ஸதமயந்தி’ யை வைத்துப்பார்ப்பவர் இதனை நன்கு காணலாம்.
இரவிவர்மாவின் அன்னம் தூய வெண்ணிறமுடையது. அதன் முழுவடிவழகும் காணப்பெறுகிறது. அதன் முகத்தில் அதன் அன்புக் கனிவும், தூதுரைக்கும் பாவமும் வெளிப்படு கின்றன. அது அமர்ந்திருக்கும் வெண்சலவைத்தூணும்,
-