296
அப்பாத்துரையம் - 5
இயற்கைப் பண்புகளின் புறவடிவங்களாகவோ, இயற்கைத் தோற்றங்களின் மனித உருவங்களாகவோ கொண்டனர். இந்திய புராணவீரரும் தெய்வங்களும் இதேமாதிரிக் கலை வடிவங்களாக்கப் படலாகும் என்ற கருத்தை இரவிவர்மாவுக்கு ஊட்டியவர் கலையார்வலரான சென்னை ஆட்சியாளர் நேப்பியர் பெருமகனாரே என்று தெரியவருகிறது. ஆனால், அவ்வழியில் அவர் கலைத்திறம் கீழ்நாட்டினர் என்றும் அடையாத கலைப்படைப்புக்களை உண்டு பண்ணியது. அவர்முறை மேனாட்டுமுறை. ஆனால், அதன்வாயிலாக அவர் வேறு எந்தக் கீழ்நாட்டுக் கலைஞரும் தீட்டாத அளவில் கீழ்நாட்டுப் பண்புக்கு உயிர்கொடுத்துத் தீட்டிக் காட்டினார்.
'சீதை காட்டுப்புற வாழ்'வில் இரவிவர்மா சீதை உருவுக்கு ஒரு பின்னணி தந்து கதையின் கட்டத்தை நினைவூட்டுவதுடன் அமைய வில்லை. சீதையின் முகத்தையே அவள் உள்ளத்தின் புயலுக்கு ஒரு பின்னணி மேடையாக்கிக் காட்டுகிறார். அவள் உள்ளத்தைச் சுட்டுக் கருக்கும் துன்பத்தின் கோடுகள், அவள் நெஞ்சை வெம்பி வெதும்பச் செய்யும் உள்ளடங்கிய சினத்தின் கனலலைகள் ஆகிய இவற்றை எதிர்த்தடக்கும் அவள் ஒப்பற்ற பொறுமை, பெண்மையின் அமைதி ஆகிய யாவும் இச்சிறு எல்லைக்குள் ஒரு போர்க்களமாகக் காட்டப்படுகின்றன.
'மைசூர் காட்டு வேட்டைக் கூடாரம்' இரவிவர்மாவின் இயற்கைத் தோற்ற எழிலுக்கும், 'பகற்கனவு காணும் சிறுமி' அவர் உணர்ச்சிச் சித்திரத்துக்கும் இலக்கியம் ஆவன. 'குழுவர்' 'இளவரசியும் வேடனும்' ஆகியவை சமூகச் சித்திரங்களில் அவருக்குள்ள ஆர்வத்தையும் திறத்தையும் காட்டவல்லன. ‘விராட அரசவை'வீரம். சோகம், சீற்றம், இளிவரல் முதலிய பல மெய்ப்பாடுகளையும் ஒரு திரையிலேயே விளக்கும் ஒப்பற்ற உணர்ச்சி நாடகம். 'சகுந்தலையும் துஷ்யந்தனும்’ ‘சகுந்தலை காதற் கடிதம்' ஆகியவை ஒப்பற்ற பண்போவியச் சித்திரங்கள். வை எல்லாவற்றிலுமே காணப்பெறும் நிழல் ஒளி வேறுபாடு, அணிமைத்தொலைவண்ணம், புற உடலுறுப்புக்களின் சதையுருட்சிவண்ணம், முகத்தின் உயிர்த்துடிப்பு, கண்களின் ஒளி ஆகியவை இரவிவர்மா ஓர் உயிர்க்கலைஞன் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.