7. கலைஞன் படைப்புக்கள்
கலைஞன் படைப்புக்கள் அவன் புகழை உலகில் நீடித்து நிலைக்கச் செய்கின்றன. ஆயினும் தன் படைப்புக்களைக் காட்டிலும் கலைஞனே சிறப்புடையவன் என்று கூற இடமுண்டு. ஏனென்றால், ஒவ்வொரு படைப்பிலும் அவன் தன் திறங்களில் ஒரு சிலவற்றையே காட்ட முடியும். சிறப்பாக, மன்னன் இரவிவர்மாவின் கலைப்படைப்புக்களான ஓவியங்கள் இத்தகைய பல்வகைப் பெருக்கம் உடையன. அவற்றுள் சிலவற்றை ஒருசேர வைத்து ஒப்பிட்டுக் காண்போம்.
இரவிவர்மா தம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலரின் உருவோவியங்கள் தீட்டியுள்ளார். அவற்றுள் அவர் துணைவி யாரின் தமக்கையரான அந்நாளைய மூத்த அரசியின் படமும் அவர் கணவனார் கேரளவர்மா ஸி.எஸ்.ஐ. அவர்களின் படமும் குறிப்பிடத் தக்கவை. மூத்த அரசியின் கண்களில் பெண்மையின் அமைதியும் கனிவும் அரசுரிமைக்குரிய துணிவும் உறுதியும் தெளிவாகத் தோற்றமளிக்கின்றன. இடது தோளில் அரசுரிமைச் சின்னம் தொங்குகிறது. காதில் வண்ணத்தோடும் பங்கொண்டை யிற் செருகிய பூக்களும் நிற்கும் நிலையில் அடையும் அரசியின் படம் அவரது சிறப்புரிமைக் கோலத்துக்குரியனவல்ல என்று காட்டுகிறது. கேரள வர்மாவின் தோற்றம் இதற்கு மாறாக, வீரத்தையும் உடல் வலுவையும் எடுத்துக் காட்டுகிறது. கண்கள் சிறுத்துக் கூரியனவாய் இருக்கின்றன. இளமையும் வீரமும் முகபாவத்தில் இடம்பெறுகின்றன. தலையிலணிந்த பாகையும் கையில் வைத்திருக்கும் சுவடியும் அவர் அரச குடும்ப உரிமையையும் கலையார்வத்தையும் சுட்டிக்காட்டுகின்றன.
மைசூரில் வேல்ஸ் இளவரசரும் மைசூர் அரசரும் சேர்ந்து வேட்டை யாடும் காட்சியைக் காட்டும் இரண்டு படங்களும் ரவிவர்மாவின் மற்றோரரிய ஆற்றலைக் காட்டுகிறது.