16
அப்பாத்துரையம் – 5
உறையூர். சோழவேந்தன் சிறந்த கல்விமான்; நல்ல ஒழுக்கம் உடையவன்; பல நற்பண்புகட்கு இருப்பிடமானவன். அவன்,
“நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால்,
‘யான்உயிர்’ என்ப தறிகை
வேல்மிகு தானை வேந்தர்க்குக் கடனே."
என்ற அறவுரையை நன்கறிந்தவன்; ஆதலின், மன்னுயிரைத் தன் உயிர்போல மதித்து நடந்து வந்தான்.சோணாட்டுக் குடிகள் தம் அரசனுடைய நற்பண்புகளைப் பாராட்டி, அவனது செங்கோன்மையைப் புகழ்ந்து அமைதியான வாழ்க்கையை நடத்தி வந்தனர். அரசன் நல்ல தமிழ்ப் புலவன் ஆதலின், பொத்தியார்,புல்லாற்றூர் எயிற்றியனார் முதலிய புலவர் பலரை ஆதரித்து வந்தான். புலவர்கள் அவன்பால் பரிசில் பெறுதலை விட அவனது நட்பைப் பெறவே பெரிதும் விழைந்தனர்.
பழகாத நட்பு
இத்தகைய செங்கோற் சோழனைப்பற்றி நமது புலவர் பெருமானான பிசிராந்தையார் கேள்வியுற்றார். நல்லாரை நல்லாரே நாடுவர். அல்லவா? பிசிராந்தையார் சோழர் பெருமானைப் பற்றிக் கேள்விப்பட்ட நாள் முதல் அவனை நேரிற் காண வேண்டும் என்று விரும்பினார்; அஃது உடனே கைகூடவில்லை. எனினும், அவர் நாள்தோறும் அவனை நினைந்து நினைந்து மகிழ்வார்; 'அப்பெருமானை என்று காண்போம்!' என்று ஏங்குவார். புலவர், சோழனைப் பற்றிக் கேள்விப்பட்டவாறே, சோழ மன்னவனும் புலவர் பலர் வாயிலாகப் பிசிராந்தையாரைப் பற்றிக் கேள்வியுற்றான்; அவரைக் காண வேண்டும், கண்டு அளவளாவ வேண்டும் என்று அவாவினான். அதன் காரணமாக அரசனும் அரும்புலவரை நாள்தோறும் எண்ணி வருவானாயினன். 'இஃது என்ன வியப்பு! ஒருவரை ஒருவர் பாராமல், ஒருவரோடு ஒருவர் பழகாமல் உள்ளத்து உணர்ச்சியால் நட்புக் கொண்டுவிட்டனரே!' எனின், இதற்கு விடையாகப்