20
படித்திருக்கிறீர்கள்
அல்லவா?
அப்பாத்துரையம் - 5
அதுபோல, 'நற்குண நற்செயல்கட்கு இருப்பிடமானவன்' என்று யாவரும் ஒருங்கே பாராட்டுதற்கு உரியவனாகி, அறவழியில் ஆட்சி புரிந்துவந்த கோப்பெருஞ் சோழனுக்கு, மறவழி மதி செல்லும் மைந்தர் இருவர் தோன்றி வளர்ந்து வந்தனர். அவர்கள் தந்தைக்கு நேர்மாறான மனநிலை உடையவர்கள். அரசன், புலவர் பெருமக்களுடன் பெரும் பொழுது போக்கிக்கொண்டு சிறந்த கொடை வள்ளலாய் விளங்குதலைக் கண்ட அவர்கள் மனம் புழுங்கினார்கள். புலவர்க்கும் பாணர்க்கும் அளிப்பது தாய் மொழியை வளர்ப்பதாகும் என்பது அம்மூட மக்கள் மூளையிற் படவில்லை; அதனை வீண் செலவெனக் கருதினர்; மேலும், வயது முதிர்ந்த தம் தந்தை, வயது வந்த தங்கட்குப் பட்டம் கட்டாமல் தான் அரசனாக இருந்து வருதலை வெறுத்தனர். இத்தகைய பல காரணங்களால் அவர்கள் தந்தையிடம் மாறுபட்டனர்; அவசியம் நேரின் தந்தையை எதிர்க்கப் படை ஒன்றையும் தயாரித்து வந்தனர்.
தந்தை – தனயர் பூசல்
எல்லாப் போக பாக்கியங்களையும் குறைவற அனுபவித்து வந்த கோப்பெருஞ் சோழன் வெளியில் மகிழ்ச்சியுடையவன் போலக் காணப்படினும், உள்ளத்தில் மகிழ்ச்சி அற்றவனாகக் காணப்பட்டான். பிள்ளைகள் ஒழுக்கக்கேடே அவனது உள்ளத்தை உறுத்தி வந்தது. அவன் இறுதியில் பிள்ளைகளது தீய எண்ணத்தை அறிந்து கொண்டான். 'இத்தகைய ஒழுக்கம் கெட் மக்களிடம் நாட்டை ஒப்புவித்தலை விட அவர்களைப் போரில் ஒழித்து விடலே தக்கது' என்று எண்ணினான்; எண்ணிப் போர்க்கோலம் கொண்டான். படையும் தயாராகி விட்டது. மக்களும் போரிடத் தயாராயினர். என்ன கொடுமை!
எயிற்றியனார் இடையீடு
தந்தையும் தனயரும் போரிட நின்றதைச் சோழனைக் காண வந்த புல்லாற்றூர் எயிற்றியனார் என்ற புலவர் கண்டார்; வியப்பும் திகைப்புமை கொண்டார். அவர்தம் நாடிவந்த கோப்பெருஞ் சோழனைக் குறுகி,