பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

அப்பாத்துரையம் - 5

ஒதுங்கி இருங்கள்” என்றான். அது கேட்ட சான்றோர், “அரசே, பிசிராந்தையார் உனது பெயரைக் கேட்டவரே அன்றி நேரில் பார்த்தவர் அல்லர்; பழகியவர் அல்லர். நீயும் அவரை நேரில் அறியாய் மேலும் அவர் மிக்க தூரத்தில் உள்ள பாண்டிய நாட்டினர்; நீ வடக்கிருக்கும் செய்தியை அவர் எங்ஙனம் அறிவர்; அறிந்து, எவ்வாறு இங்கு வருதல் கூடும்?” என்றனர்.அரசர் பெருமான அச்சான்றோரை அகமலர நோக்கி, “அறிஞர்களே, நீங்கள் அங்ஙனம் ஐயுற வேண்டா.அவர் என்னைப் பாராவிடினும் என் உயிர் நண்பர் ஆயினார்; நானும் அங்ஙனமே அவரது உயிர்த்துணைவன் ஆயினேன். நான் நன்னிலையில் இருந்த காலத்தில் அவர் வராவிடினும் வடக்கிருந்து உயிர்விடத் துணிந்துள்ள இந்தக் காலத்தில் தவறாது இங்கு வருவார்.அவர் தமது பெயரைப் பிறர்க்குச் சொல்லும்பொழுது ‘என் பெயர் சோழன்' என்று அறிவிலியாகிய என் பெயரையே தமது பெயராகச் சொல்லும் வேறுபாடு அற்ற அன்புரிமை உடையவர், அவர் நெடுந்தூரத்தில் உள்ள பாண்டி நாட்டுப் 'பிசிர்' என்னும் ஊரினர்; ஆயினும், யான் வடக்கிருத்தலைக் கேள்வியுற்று வந்துகொண்டிருக்கிறார்; சிறிது நேரத்தில் இங்கு வருவார். அவர்க்கும் என்னோடு வடக்கிருக்க இடம் ஒழித்து வையுங்கள்’ என்றான். காவலனது கனிந்த வுரையைக் கேட்ட சான்றோர், “ஈதென்ன புதுமை!” என வியந்து, அரசன் அறிவித்தவாறே இடம் ஒழித்து வைத்தனர்.

ஒத்த உணர்ச்சி

சோழர் பெருமான் சொன்னது உண்மையே ஆகும். அவன் அரசு துறந்ததையும் துறவுபூண்டு வடக்கிருக்கத் துணிந்ததையும் அங்ஙனம் துணிந்து ஆற்றிடைக் குறையில் தங்கி இருத்தலையும் ஒத்த மன வுணர்ச்சியால் பிசிர்ஆந்தையார் உணர்ந்தார்; உடனே தம் பதியை விட்டுப் புறப்பட்டு வந்தார்; வழியில் பல காடு களையும் மலைகளையும் கடந்து நடந்து வந்தார். அவர் நெடுந் தூரத்தைச் சில நாட்களில் கடந்தார்; கோப்பெருஞ் சோழன் குறித்த நேரத்தில், அருகில் இருந்த சான்றோர் வியக்க அரசன்முன் தோன்றினார். கனிந்த அன்பினால் புரவலனும் புலவரும் ஒருவரை ஒருவர் அன்புக் கண்ணீர் வரத் தழுவிக் கொண்டனர்.