கோவூர் கிழார்
3. கோவூர் கிழார்
1. இளமையும் கல்வியும்
கோவூர் சோழ நாட்டில் உள்ள ஊர். இதனில் வாழ்ந்த வேளாளர் மரபினர் ஒருவர்க்குப் பிறந்தவரே நமது செந்தமிழ்ப் புலவரான கோவூர் கிழார். இவரது இயற்பெயர் இன்னதென்பது தெரியவில்லை. ஊர்ப் பெயரும் மரபுப் பெயரும் சேர்ந்தே இவர் ‘கோவூர் கிழார்’ எனப்பட்டார். இவ்வாறும் பெயர்கள் அமைதல் பண்டை மரபாகும்.
இளமையும் கல்விப் பயிற்சியும்
கோவூர் கிழார் இளமைப் பருவத்தில் ஒரு நல்லாசிரியரை அடுத்துச் செவ்வையாகச் கல்வி கற்று வந்தார்; குறித்த நேரத்தில் ஆசிரியர் இல்லத்தை அடைதல், ஆசிரியர் 'இரு' எனச் சொன்ன பிறகு இருத்தல் (உட்காருதல்), பாடம் சொல்லுங்கால் அறிவை நிலைப்படுத்திக் கேட்டல், 'போ' என்றவுடன் விடைபெற்று வீடு திரும்புதல், அவ்வப் போது தோன்றும் ஐயங்களைப் பணிவோடு கேட்டுத் தெளிதல் என்னும் (பண்டை) மாணவர்க்குரிய இலக்கணங்களில் வழுவின்றி நடந்தமையால், விரைவில் தமிழ்ப் புலமை எய்தினார் ஒழுக்க மேம்பாடு இன்றிப் புலமை மட்டும் இருந்து பயன் என்ன? ஒரு பயனும் உண்டாகாதன்றோ? நமது கோவூர் கிழார் கல்வியுடன் ஒழுக்கத்தில் சிறந்த விளங்கினார். இளமைதொட்டே அவரிடம் அன்பு, அருள், ஈகை முதலிய நற்பண்புகள் வேரூன்றி வளர்ந்து வந்தன. அவர், பிறர் துன்பப்படுதலைக் காணச் சகியார்; அதனைத் தமக்கு வந்ததாக எண்ணி விரைந்து களைவார் இத்தகைய நற்செயலால் அவரைப் பிற புலவரும் உச்சி மேற்கொண்டு போற்றலாயினர். அவரைச்