சங்க காலப் புலவர்கள்
65
வந்தவன். ஆயினும், அந் நன்னன் செய்த கொடுஞ்செயல் ஒன்றைக் கூறுகின்றேன், கேள்; அவனது சோலையில் இருந்த மரத்தின் பசுங்காய் ஒன்று அருகில் பாய்ந்து கொண்டிருந்த நீரில் மிதந்து சென்றது. அப்பொழுது அந்நீரில் நீராட வந்த பார்ப்பனச் சிறுமி ஒருத்தி அதனை எடுத்து உண்டாள். அஃதறிந்த நன்னன் அவளைக் கொலை செய்ய முற்பட்டான். அஃதறிந்த அவள் தந்தை, தன் மகள் செய்த தவற்றுக்காக எண்பத்தொரு யானைகளும் அவளது நிறையளவு பொன்னாற் செய்த பாவை ஒன்றும் தருவதாகக் கூறித் தன் மகளை விடுமாறு வேண்டினான். நன்னன் அவ்வேண்டுகோளைப் பொருட்படுத்தாமல் அச்சிறுமியைக் கொன்றான். உன் முன்னோருள் மற்றொருவன் உலோப குணம் மிக்கவன்; புலவர் பாணர் விறலியர் சொல்லின், வாயிற் கதவுகளை அடைத்து விடுதல் வழக்கமாகக் கொண்டிருந் தான். இத்தகையவர் தீச்செயல்கள் உன் மரபுக்கு வசையாக இருந்து வருகின்றன. ஆதலின், அந்நாள் முதலாக உங்கள் மலையைப் புலவர் பாடுதல் இல்லை. இக்காரணங்களாற்றான் உன்னை யான் தழுவாது விட்டேன்." என்று புலவர் பெருமான் தம் மனத்தில் இருந்ததை ஒளியாமல் உரைத்தார். பின்னர், இளங்கண்டீரக்கோ புலவர்க்கு வேண்டிய பரிசில் நல்கினான். புலவர் அவற்றைப் பெற்றுக் கொண்டு அவனை வாழ்த்தி அகன்றார்.
மூவனை முனிதல்
-
பெருந்தலைச் சாத்தனார் மூவன் என்ற சிற்றரசனைக் காணச் சென்றார். அவன் கோடைமலைத் தலைவனைப் போலப் புலவரை உபசரித்தான்; ஆனால், அவனைப் போலவே பரிசில் தராது காலம் நீட்டித்தான்.புலவர் சினங் கொண்டார்; அவனுக்கு நல்லறிவு புகட்ட விரும்பினார். அவர் அக்குறுநில மன்னனை நோக்கி,
'வள்ளலே, நினது நாடு மிக்க வளமுடையது; பொய்கைகள் மிக்குடையது.பொய்கைக்கண் மேய்ந்த நாரை நெற்போரின்கண் உறங்கும். வயலில் நெய்தற் பூக்கள் மிக்கிருக்கின்றன. நின்நாட்டு உழவர் விளைந்த நெல்லை அறுத்துவிட்டு,ஆம்பல் இலையில் மதுவை வார்த்து உண்பர்; பிறகு அருகில் உள்ள கடல் ஒலியையே