பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுபாசு சந்திர போசு

|| 89

அஹிம்ஸையைக் காட்டினார் என்று விளங்கக் கூடும். ஆனால் காந்தியடிகளின் அஹிம்ஸைக்கும் போஸ் அஹிம்ஸைக்கும் வேற்றுமை உண்டு. காந்தியடிகள் அஹிம்ஸையப் பகைவர் களிடமே சிறக்கக் காட்டினார். போஸ் அதனை நண்பர் களிடையே காட்டினார். துப்பாக்கியின் முன்னிலையில் அதாவது போர்க்களத்திலும் அஹிம்ஸை செல்லுமென்று காந்தியடிகள் எண்ணினார். காந்தீய பக்தர்களும் அங்ஙனம் ஆட்சியை எதிர்ப்பதில் மட்டுமே அதை ஒரு போர் முறையாகக் கொண்டனர்; எதிரிகளைப் போர்முனையில் எதிர்க்கும் போதன்று!

அஹிம்ஸை அன்புக்கு அடிப்படையானது. அன்புடை யாரிடை எழும் அன்புப் பூசலில் மட்டுமே அது பயன்படும். இந்நிலையைக் குடும்ப வாழ்விலும் குடும்ப வாழ்வு ஒத்த நல்லரசாட்சியிலுமே காணலாம். காந்தியடிகள் கண்களுக்கு உலக முழுவதுமே ஒரு குடும்பமாக தோன்றிற்று. அதனால் அவர் அதை எங்கும் பயன்படுத்த எண்ணினார். காந்தீய பக்தர்கள் அங்ஙனம் எண்ணுவதாகக் கூறுவதில் பொருளில்லை. ஏனெனில் அவர்கள் உலகை ஒரு குடும்பமாக எண்ணத் துணிய மாட்டார்கள்!

போஸ் வாழ்க்கையில் பருப் பொருளாகக் காணத்தகும் சிறப்புக்கள் விளக்கப்படாமலே எவரும் காணத்தக்கவை. பதினொரு தடவை சிறை; உலகெங்கும் கடுஞ்சூழ்நிலைகளில் திரிதல், நோய், நலிவு ஆகியவற்றிடையே ஓயா உழைப்பும்; வாழ்க்கை முற்றிலும் இடைஞ்சல்களிடையேயும், அபாயங் களிடையேயும் துணிகரமாகப் பணியாற்றல்; உலகின் ஆற்றல் மிக்க வல்லரசுகளையும், தலைவர்களையும் அஞ்சாது எதிர்த்தல், நட்பாடுதல் ஆகிய பண்புகளும் எங்கும் இலைமறைகாய் போல் அவர் வாழ்வில் காணத்தக்கவை.

ஒரே ஒரு பண்பு அவர் வாழ்வைக் காந்தியடிகள் விவேகானந்தர் போன்ற ஆன்மிகப் பெரியார்களுடன் பிணைக்கத் தக்கதாயுள்ளது. அதுவே அவர் சமயப்பற்று. இந்தியாவில் சமயப்பற்று பலபடியிலும் பெரியார்கள் பலரிடமும் உண்டு. ஆயினும் அதன் வேறுபாடுகளும் அவற்றின் பயனும் கூர்ந்து கவனிக்கத் தக்கவை. காந்தியடிகள் சமயப்பற்று அவர்