பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
98 ||

அப்பாத்துரையம் - 6



இருக்கின்றனர். நமது கழகம் கிழக்காசியா முழுதிலுமுள்ள இந்தியர்களின் ஏகப் பிரதிநிதி சபையாகவும் முழு நம்பிக்கை பெற்றதாகவுமிருப்பதால், அத்தகைய சர்க்காரை அமைக்க முழுத்தகுதி பெற்றிருக்கிறது. கழகமும் எனக்கு அதிகாரம் கொடுத்திருப்பதால், ஆஸாத் ஹிந்த் தற்காலிக சர்க்கார் அமைக்கும் வேலை எனது கடமையாயிற்று.

நம் தாய்நாட்டில் இப்படி ஓர் சர்க்கார் அமைக்கப்பெற்று அதன்மூலம் இறுதி விடுதலைப் போர் ஆரம்பமாகியிருந்தால், மதிக்க முடியாத மகத்துவமாகவேதான் இருக்கும். ஆனால் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அங்குள்ள மாபெரும் தலைவர்கள் சிறைச்சாலைகளில் அடைப்பட்டிருப்பதால், அம்மாதிரியான சர்க்கார் அமைப்பதை எதிர்பார்க்க முடியாது. அதோடு அங்கு விடுதலைப் போர் நடத்துவதை அல்லது தொடங்குவதை நாம் எதிர்பார்த்தால் பகற்கனவாகத்தான் முடியும். அந்தப் புனித கைங்காரியத்தை இங்குள்ள நம்மால் தான் செய்ய முடியும்.

இந்தச் சந்தர்ப்பத்தில், நம் தாய்நாட்டு எல்லைக்கு வெளியே ஓர் தற்காலிக சர்க்காரை அமைக்கலாமென்பதற்கு, உலகச் சரித்திரம் பல சான்றுகள் தருகிறது. அன்றி, நம் நாட்டின் வெளியே இருந்து கொண்டு கூட சுதந்திர யுத்தத்தை நாம் நடத்தலாமென்றும் அச் சரித்திரம் கற்பிக்கிறது. இந்திய எல்லைக்கு வெளியே அரசியல்ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் நாம் கொண்டு செல்லும் சுதந்திர இயக்கம், நம் தாய்நாட்டின் உட்புறத்திலே நடந்து கொண்டிருக்கிறது; இந்த உண்மையை நாம் எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும்.

இங்கு நாம் செய்துவரும் ஒவ்வொரு முயற்சிக்கும், தாய் நாட்டிலுள்ள இந்தியர்களிடமிருந்து நிறைய ஆதரவு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அங்குள்ள பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பெரும்பாலானவர்களிடமிருந்து கூட பேராதரவு வந்து கொண்டிருக்கிறது. தவிர, இந்தியாவிலுள்ள தேச பக்தர்களுக்கும் வெளி நாடுகளிலிருந்து கொண்டு தாய் நாட்டின்