102 || |
அப்பாத்துரையம் - 6 ——————————————— |
சூழ்ச்சியாலும், தகுந்த தலைவரில்லாக் குறையாலும் படிப்படியாகப் பலவீனமடைந்ததால், இறுதி வீழ்ச்சியும் அடிமை விலங்கும் கௌவிக் கொண்டன. பின்னர், பகைவரும் அதிசயிக்கத்தக்கவாறு, பிறந்த பொன்னாட்டுக் காகத் தங்களைப் பலியிட்ட வீர ஜான்சி ராணி - தாந்தியாதோபி - குன்வர்சிங் - நானாசாகிப் போன்றவர்களின் நினைவு, நம் தேசத்தார் மனதினின்றும் அகல முடியாததாகும். உலகம் உள்ளளவும் நமக்கு வழிகாட்டும் நட்சத்திரங்களே அவர்கள்.
1857 -க்குப் பின் இந்திய மகாஜனங்கள், பலவந்தமாக நிராயுதபாணிகளாக்கப் பெற்று, நீண்டகாலம் தலைதூக்காத படி பிரிட்டிஷாரின் மிருகத்தன்மைக்கும் கொடுங்கோன்மைக் கும் ஆளாயினர். உணர்ச்சியிழந்து, நம் நாடு நம்மதே என்பதையும் மறந்து சிறுமையுற்றனர். 1885-ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றியதும் புதியதோர் எழுச்சி கொண்டோம். முதல் மகாயுத்தம் முடியும் வரை இந்திய மக்கள் தங்கள் சுதந்திரத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு, சாத்தியமான சகல முறைகளையும் கைக்கொண்டனர். கிளர்ச்சி, பிரச்சாரம், பிரிட்டிஷ் சாமான் பகிஷ்காரம், பயங்கர இயக்கம், நாசவேலை ஆகிய துறைகளில் இறங்கி, இறுதியில் ஆயுதம் தாங்கிய புரட்சியும் நடத்தினார்கள். அம் முயற்சிகளெல்லாம் அப்பொழுது வெற்றி தரவில்லை. கடைசியாகத் தோல்வி மனப்பான்மைதான் பீடித்தது.
புதிய முறைகளுக்காகக் காத்திருக்கும் நேரத்தில், கோடைக்கால மழை போல் மகாத்மா காந்தி தமது புதிய ஆயுதங்களான ஒத்துழையாமை, சாத்வீகச் சட்ட மறுப்பு இவைகளுடன் தோன்றினார். அது முதல் இருபது ஆண்டுகள் வரை மக்களின் உணர்ச்சியும் எழுச்சியும் தீவிரமாக வளர்ந்தன. “விடுதலை”- “சுதந்திரம்” என்ற தாரக மந்திரம் ஒவ்வொரு நகரம், கிராமம் எங்கும் புகுந்தது. வீடுதோறும் இம்மந்திரம் ஒலித்தது. தியாக உணர்ச்சி உரம் பெற்றது. ஒரே அரசியல் ஸ்தாபனத்தின் கீழ் மக்கள் ஒன்றுபட்டனர். இவ்வாறு உணர்ச்சி கொண்ட இந்தியர்கள், அரசியலில் தங்கள் சக்தியின் தன்மையை