5. இரத்தம் கொடு! சுதந்திரம் இதோ!
(1994 ஜூலை 4ஆம் நாள், இந்தியச் சுதந்திரக் கழகத்திற்கு நேதாஜி தலைமை ஏற்று ஓராண்டு நிறைவெய்தியது பற்றி, கிழக்காசிய இந்தியர்கள் அகமகிழ்ந்து கொண்டாடிய நேதாஜி வார விழாவின்போது, நேதாஜி ஆற்றிய சொற்பெருக்கு.)
பன்னிரண்டு மாதங்களாக நமது சுதந்திர இயக்கம் வெகு தூரம் முன்னேறியிருக்கிறது. இந்தியயாவில் இருபது ஆண்டுகளாக ஊழியம் செய்து அனுபவம் பெற்றிருப்பதால், இங்கு நடந்துள்ள வேலைகளின் மதிப்பையும் தரத்தையும் என்னால் சரியாக அளவிட முடியும். என்னுடன் ஒத்துழைத்த உங்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றி. இன்னும் உங்கள் முன் பல வேலைகள் இருக்கின்றன. உத்சாகத்துடனும் உறுதியுடனும், ஆள், பணம், பொருள் இவைகளைச் சேகரிப்பது அவசியம். இவைகளைச் சேகரிக்கும்போது பல சிக்கல்கள் குறுக்கிடும். அவைகளை உடைத்தெறிந்து கொண்டு தான் நாம் முன்னேற வேண்டும். மற்றபடி விடுவிக்கப்பட்ட இந்தியாவில் நிர்வாகம், புனருத்தாரணம் ஆகிய வேலைகளுக்கும் ஆண் பெண் இருபாலாரும் தேவை.
பர்மாவிலிருந்து நம் எதிரிகள் பின் வாங்கும்போது கையாண்ட முறைகளை, அதாவது சுட்டெரிக்கும் கொள்கையை இந்தியாவிலுள்ள அவர்கள் கையாளலாம். அப்படி நேர்ந்தால், அந்த நிலைமையைச் சமாளிக்க நாம் தயாராகி விடவேண்டும். எல்லாவற்றையும் விட மிக முக்கியமான பிரச்சனை யொன்று இருக்கிறது. நம் யுத்த களத்துக்கு சங்கிலித் தொடர்போல் உதவிப் படைகளையும், போருக்கு அவசியமான சாதனங்களையும் அனுப்புவதே அப்பிரச்சனை. இந்தப் பிரச்சனையில் தவறினால், போர் முனையில் பெறும் வெற்றியும், அதன் பாதுகாப்பும்,