பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. குடி மரபு

மன்னர் மரபிலே தோன்றி மன்னர் ஆனவரும் உண்டு; குடிமரபில் தோன்றி மன்னவரானவரும் உண்டு. புகழிலும் ஆற்றலிலும் பண்பிலும் பிந்திய வகையினரே மேம்பட்டவர்கள் என்று வரலாறு காட்டுகிறது. உண்மையில் புகழ்மிக்க மன்னர் மரபுகளை ஆக்கியவர்களே குடிமரபினர்தான். ஆயினும், மன்னர் மரபுக்கே புகழ் தந்தவர்கள்கூடத் தம் குடி மரபை மறைக்கவே விரும்பியுள்ளனர். முடிமரபின் மாயப் புதிர் இது. மன்னரின் இம்மயக்க ஆர்வத்தைப் பயன்படுத்தி மன்னனைத் தன்னலப் பசப்பர்களும் புரோகிதர் குழாங்களும் போலி அரச மரபுகளையோ, தெய்வீக மரபுகளையோ படைத்துருவாக்க முனைந்துள்ளனர். இவற்றின் மூலம் அவர்கள் மன்னரைத் தம் வயப்படுத்தவும், குடிமக்களிடமிருந்து அவர்களைப் பிரித்து வைத்துத் தன்னலம் பெருக்கவும் தயங்கியதில்லை.

குடிமரபிலே பிறந்து கோ மரபுக்கு மதிப்பளித்தவன் ஹைதர். ஆனால், மேற்கூறிய ஆர்வத்துக்கு அவன்கூட விலக்கானவன் என்று கூற முடியாது. தன் வீரப் புகழ் ஆட்சியின் உச்சநிலையிலேகூட, அவன் தான் பீஜப்பூர் மன்னர் மரபினன் என்று கூறி, தன் பெருமையை பீஜப்பூரின் பெருமையாக்கி மகிழ்வதுண்டாம்! ஆனால், கால நிலையை ஊன்றி நோக்கினால், ஹைதரின் இவ்வார்வம் கண்டிக்கத் தக்கதல்ல என்னல் வேண்டும். ஏனென்றால், அந்நாளைய இஸ்லாமிய உயர் குடியாளரும், அவர்களைப் பின்பற்றி வெள்ளையரும் பீஜப்பூர் போன்ற தென்னாட்டு அரசுகளின் மரபுகளைக்கூட உயர் மரபாகக் கருதவில்லை. உயர்குடி என்றால் தென்னாட்டுக்கு அயலான குடி என்றே அவர்கள் கருதினர். மரபின் பழமைக் கொடி வடபுலத்திலிருந்தோ, இஸ்லாமிய மேலைப்புறங்களிலிருந்தோ வந்திருந்தால்தான் உயர்குடிச் சிறப்பும் மதிப்பும் அதற்கு இருக்க முடியும் என்று அவர்கள் எண்ணினார்கள்.