பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
176 ||

அப்பாத்துரையம் - 6




1701-இல் இலியாஸ் உயிர் நீத்தான். அவன் சார்ந்த ஞானகுருவின் புதல்வியை மணந்துகொண்டு, ஃவத்தே முகமது தன் படிமுறையை உயர்த்திக்கொண்டான். ஏனென்றால், இம்மண உறவுமூலம் ஆர்க்காட்டுக் கோட்டை முதல்வன் இப்ராஹிம் அவன் மைத்துனனானான்.

இலியாஸுக்கு ஹைதர் சாகிபு என்ற புதல்வன் இருந்தான். அவன் கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலியின் பெரியப்பன் புதல்வனாதலால், மூத்த ஹைதர் சாகிப் எனக் குறிக்கப்படுகிறான். அவன் சிற்றப்பன் ஃவத்தே முகமதுவைப் போலவே சிறந்த வீரன். மைசூரை அப்போது ஆண்டவன் சிக்கதேவராயரின் புதல்வனான தொட்ட கிருஷ்ணராஜ் ஆவன். மூத்த ஹைதர் சாகிபு மைசூர் அரசன் படைத்துறையில் ‘நாய்கன்' என்ற பட்டத்துடன், நூறு குதிரைகளும், இரு நூறு காலாட்களும் உடைய படைப்பிரிவின் தலைவனானான்.

புகழும், குடி மதிப்பும் ஃவத்தேமுகமதுவுக்கு இன்பம் தரவில்லை. நவாபின் சூழலிலிருந்த பொறாமைப் பூசல்கள் அவன்மீது புழுக்கத்தையும் வெறுப்பையும் வளர்த்தன. அரசுரிமை மாற்றத்துடன் அவன் அங்கிருந்தும் வெளியேற வேண்டியதாயிற்று. சிலகாலம் தமையன் மகன் மூத்த ஹைதர் சாகிபுவின் உதவியால் அவன் மைசூரில் அலுவல் பார்த்தான். பின் சுரா மாகாணத் தலைவனான தர்கா கலீகானிடம் சென்று பெரிய பலாப்பூர்க் கோட்டை முதல்வனாக அமர்வு பெற்றான். இங்கே மாகாணத் தலைமை அரசுரிமைப் பதவி அடிக்கடி மாறிற்று. ஃவத்தேமுகமதுவின் திறமையும் புகழும் என்றும் பெரிதாகவே இருந்தது. ஆனால் ஆட்சி மாற்றம், கட்சி எதிர்க்கட்சிப் பூசல் காரணமாக அடிக்கடி அவன் அல்லற்பட்டு இக்கட்டுகளுக்கு ஆளானான்.

ஃவத்தே முகமதுவுக்கு பர்ஹான் உதீனின் புதல்வி யல்லாமல், மற்றும் இரண்டு மனைவியர் இருந்தார்கள். அவர்களில் இளையாள் மூலம் அவனுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். இரண்டாவது புதல்வன் இளமையிலேயே காலமானான்.ஷாபாஸ்கான், ஹைதர் அலிகான் என்ற மற்ற இரு புதல்வர்களுமே அவன் குடிமரபின் புகழ்ச் சின்னங்களாக