பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
184 ||

அப்பாத்துரையம் - 6




ஹைதர் இப்போது போர்வீரனாக மட்டும் செயலாற்ற வில்லை. மாநிலத்தின் சூழ்நிலையையும் மைசூரின் நிலையையும் அவன் கூர்ந்து கவனித்தான். பணமும், படை வலிமையும், படைத்துறைச் சாதனங்களும் அன்றைய நிலையில் ஓர் அரசின் உறுதிக்கு மிகமிக இன்றியமையாதவை என்பதை அவன் கண்டான்.எனவே, நாஸிர்ஜங் வீழ்ச்சியடைந்ததும்,நாஸிர்ஜங்கின் கருவூலமும் படைத்துறைச் சாதனங்களும் எதிர்தரப்பாரிடம் சிக்கிவிடாமல் அவன் தடுத்தான். அவற்றைத் தானே கைக்கொண்டு அவற்றுடன் மைசூருக்கே மீண்டான். சிறிய படைவீரர் களிடையிலிருந்தும் பொதுமக்களிடையிலிருந்தும் ஆள் திரட்டி அவன் தன் படையணிகளைப் பெருக்கிக் கொண்டான்.சிறப்பாக மலை நாட்டு மக்களாகிய வேடர்கள் அவன் படையின் ஒரு தலைக்கூறாய் அமைந்தனர்.

நாஸிர்ஜங் வீழ்ச்சியுடன் மகமதலியின் கை வலுத்திருந்தது. கிளைவின் உதவியால் அவன் அரசிருக்கை பெற்றாலும், அதை வைத்துக் காக்கும் வகையில் அவன் கையாலாகாதவனாகவே இருந்தான். இந்நிலையில், ஹைதரும் மைசூர் அமைச்சரும் கட்சிச் சார்பில்லாமல் தம் தனி நலம் பேணுவதிலேயே ஈடுபடலாயினர். இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி மைசூர் வரும் வழியிலேயே ஹைதர் புதுச்சேரியைச் சென்று பார்வையிட்டான். பிரஞ்சுக்காரருடனும் பிரஞ்சுத் தலைவருடனும் நட்பு முறையில் அளவளாவி, அவர்கள் போர் முறைகள், கட்டுப்பாடு, அமைப்பாண்மைத்திறம், வீர உணர்ச்சி ஆகியவைகளை அவன் கூர்ந்து கவனித்தான்.

இந்நிகழ்ச்சி ஹைதர் அரசியல் வாழ்வில் ஒரு நல்லொளி விளக்கைப்போல் அமைந்தது. புதுப்படைகளைத் திறம்படப் பயிற்றுவிப்பதில் இதுமுதல் இதுமுதல் அவன் மிகுதிக் கவனம் செலுத்தினான். படைத்துறை நடவடிக்கை நுட்பங்களிலும் அவன் கருத்தாராய்ச்சி ஓடிற்று. தவிர, பயிற்சி வகைகளிலும், அமைப்பாண்மைத் துறையிலும் பிரஞ்சுப் படைத்துறை வல்லுநர்களையும் பணித் தலைவர்களையும் அமர்த்த இது தூண்டுதலளித்தது. பிரஞ்சு மக்களின் வாய்மையும் உறுதியும் இவ்வேளையில் அவனுக்குப் பெரிதும் பயன்பட்டன.

மைசூர் அமைச்சன் நஞ்சிராஜன் தன் பக்கமும் பிரஞ்சுக்காரர் பக்கமுமாக ஊசலாடுவதை முகமதலி கண்டான்.