பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 185

நஞ்சிராஜன் பேரவாவைத் தூண்டி அவனைத் தன்பக்கம் இழுக்க முயன்றான். ஆகவே, தன் எதிரியாகிய சந்தாசாகிபை அழித்துத் தமிழக முழுவதையும் வெல்ல உதவினால் திருச்சிராப்பள்ளிக் கோட்டையையும் அதைச் சார்ந்த பகுதிகளையும் நஞ்சிராஜனுக்கு அளிப்பதாக அவன் நைப்பாசை காட்டினான். மைசூர் மன்னனும் மக்களும் இதை விரும்பவில்லை. ஆயினும், பேராவல் தூண்ட நஞ்சி ராஜன் இதை ஏற்றான். ஹைதரையே படையுடன் அப்பக்கம் அனுப்பினான்.

தன் கட்சியை வலுப்படுத்தும்படி, நஞ்சிராஜன் குத்தியை ஆண்ட மராட்டியத் தலைவன் மொராரிராவையும் பிற தலைவர்களையும் பணம் கொடுத்துத் தன் வசப்படுத்தினான். மராட்டியப் படைகளும் கொள்ளைக் கூலி பெறும் ஆர்வத்துடன் உடன் சென்றன.

இரண்டாவது கருநாடகப் போரில் பிரஞ்சுக்காரர் வீழ்ச்சிக்கும் ஆங்கிலேயர் வெற்றிக்கும் ஹைதர் அலியே பேரளவு காரணமாய் அமைந்தான். ஆங்கில வரலாற்றாசிரியர் இதை மறைத்து மழுப்பியுள்ளனர். கிளைவின் சூழ்ச்சி நடவடிக்கை ஒன்றிலன்றி, ஆங்கிலேயர் எதிர்ப்புக்கு பிரஞ்சுத் தளபதிகள் சளைத்ததில்லை. ஆனால், அத்தகையோர் இப்போது ஹைதரின் தாக்குதலுக்கு மீண்டும் மீண்டும் உடைந்தனர். சிறப்பாக ஹைதரின் குதிரைப் படையின் ஆற்றல் தென்னகம் முன்பு காணாத ஒன்றாயிருந்தது. காசீகான் பேடேயின் தலைமையில் அது இரவும்பகலும் எதிரிகளைத் தாக்கிச் சீர்குலைத்தது. எதிரிகளின் துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் கைக் கொண்டு, அப்படை எதிரிகளின் வலுவைத் தன் வலுவாக்கி வந்தது.

சந்தாசாகிப் மதுரைநாயக மரபின் கடைசி இளவரசியை ஆசை வார்த்தைகளால் நம்பவைத்து ஏமாற்றியவன். தென்னக வாழ்வில் ஹைதர் எவ்வளவு தூயவீரனோ, அதே அளவு பழிக்கஞ்சாத் தூர்த்தன் அவன். அவன் வாழ்வின் போக்குக்கு ஏற்ப, அவன் கை தாழத் தொடங்கியதுமே, அவன் உட்பகைவர்கள் கையாலேயே அவன் கோர மரணம் அடைந்தான்.

சந்தாசாகிப் கொடியவனானால், அவனை எதிர்த்த முகமதலி குடில நயவஞ்சகச் செயல்களில் அவனை விடக்