பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
186 ||

அப்பாத்துரையம் - 6



குறைந்தவனல்ல. நைப்பாசை தூண்டிப் பெரும்படையழிவுக்கும் செலவுக்கும் நஞ்சிராஜனை ஆளாக்கிப் பயன்பெற்ற பின், அவன் தான் முன்பு சொன்ன சொற்படி மைசூராருக்குத் திருச்சிராப் பள்ளியைத் தர மறுத்தான். அத்துடன் மைசூர் அமைச்சன் பிரஞ்சுக்காரருடன் ஊடாடியதாகக் கூறி, ஆங்கிலேயர்களையும் அவர்களிடமிருந்து பிரித்து, ஆங்கிலேயர்களைத் தன் மனம்போல் கைப்பாவையாக வைத்து ஆட்டிப்படைக்கலானான்.

நஞ்சிராஜன் பெருஞ் சீற்றங்கொண்டு ஹைதரை அனுப்பித் திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டான். இப்போது முகமதலி பிரஞ்சுக்காரர் தயவைப் பெற்று, முற்றுகையைச் சமாளித்தான்; முற்றுகை கிட்டத்தட்ட வெற்றி பெறும் சமயத்தில், அவன் மீட்டும் சமரசப் பேச்சுப் பேசி ஏமாற்றினான்.

எதிரிகளைக்கூடச் சரியானபடி மதித்துணர்ந்தவன் ஹைதர். பிரெஞ்சுக்காரரிடம் அவன் கொண்ட மதிப்பும் நம்பிக்கையும் குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயரிடம் கூட வாய்மையையும் வீரத்தையும் கண்டு அவன் மதித்தான். ஆனால், முகமதலியின் ஏலமாட்டாக் குள்ளநரித்தனத்தை அவன் மனமார வெறுத்தான். அத்தகைய ஒரு கோழையின் பிடியில் சிக்கி, தம் நாட்டு நலனையும், சார்ந்த நாட்டு நலனையும் விழலுக்கிரைத்த நீராக்கிய ஆங்கில ஆட்சியாளர் அறிவு நிலை கண்டு அவன் பரிந்து இரக்கமுற்றான்!

பாவம்! முகமதலியின் சூழ்ச்சியால் ஆங்கில உயர்பணியாளர் பெற்ற கைக்கூலியும் கொள்ளை ஆதாயமும் தூய வீரனான ஹைதருக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்?

1754-இல் கருநாடகப் போர் முடிவுற்றது. முகமதலியின் சூழ்ச்சி ஹைதர் வீரத்தை ஆங்கிலேயர் பக்கமாக நின்று உதவச் செய்தது. அதுவே, பிரஞ்சு மக்கள் வலுத் தளர வைத்தது. தென்னகத்தின் தீயஊழ் அன்று முகமதலி உருவில் நின்று, வீரமும் தகுதியும் அற்ற திசையில் நாட்டு விடுதலையை ஒப்படைத்தது.

இப்போர் முடிவில் ஹைதர் படையில் 1500 பயிற்சி பெற்ற குதிரை வீரரும், 3000 பயிற்சி பெற்ற காலாள் வீரரும் இருந்தனர். முழுதும் பயிற்சி பெறாத வீரர் 4000-க்கு மேல் இருந்தனர்.