பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 189

தாயிற்று. இப்பணத்துடன் அவர்கள் பெங்களூர் அருகில் சென்று, குடித்துக் கூத்தாடி மகிழ்ந்திருந்தனர்.

ஹைதர் திரும்பி வந்து செய்தி அறிந்தபோது, முதலில் நஞ்சிராஜனிடமே அவன் சீற்றம் கொண்டான். “அண்ணலே! உங்களை அவர்கள் பட்டினியிட்டு வதைத்தது அடாத செயல்தான். ஆனால், அவ்வழியில் நீங்கள் இறந்திருந்தால், உங்களுக்காக அவர்கள்மீது நான் கட்டாயம் பழி வாங்கியிருப்பேன். அத்துடன் உங்கள் வீரராகப் பூசித்திருப்பேன். ஆனால், நீங்கள் மானத்தைவிட உயிர் பெரிதென்று கருதிவிட்டீர்கள். அதற்காக வருந்துகிறேன். ஏனென்றால் நீங்கள் என் வீரத்தலைவர் என்பதற்கான தகுதியை இழந்து விட்டீர்கள்” என்று கனல் பறக்கப் பேசினான்.

நஞ்சிராஜனின் சொந்த நிலை விரைவில் ஹைதர் உள்ளத்தை உருக்கிற்று. அவன் சீற்றம் ஹரிசிங் குழுவினர்மீது திரும்பிற்று. 500 துப்பாக்கி வீரர்களை மட்டும் உடன் கொண்டு, அவன் இரவோடிரவாகக் குதிரையேறிப் புயல் வேகத்தில் சென்றான். தலைவனுக்கெதிராகக் கை ஓங்கிய அத்தறுதலைகள் மீது மூர்க்கமாகத் தாக்கி அவர்களைக் கொன்றோ, சிதறடித்தோ ஒழித்தான். அவர்களிடமிருந்த பணம், துணிமணி, தள வாடங்களுடன் அவன் நஞ்சிராஜனிடம் வந்து, அப்பொருள்களை அவன் காலடியில் வைத்தான்.

தளபதியின் வீரமும் மாறாத உறுதியும் கண்டு மகிழ்ந்த நஞ்சிராஜன், அவன் மீட்டுக்கொண்டு வந்த செல்வத்தில் சிறிதே தனக்கு எடுத்துக்கொண்டு, மீந்தவற்றை அவனுக்கே அளித்தான். இறந்த வீரரின் குதிரை, ஒட்டகைகள், படைக்கலங்கள் முதலியவற்றையும் நஞ்சிராஜன் அவனிடமே ஒப்படைத்தான். அத்துடன் இதுமுதல் அவன் தன்னுடன் ஹைதரைச் சரியாசனத்தில் இருத்தி, அமைச்சனுக்கு ஓர் அமைச்சனாக நடத்தினான். ஹைதர் அறிவுரை கலந்தே அவன் எப்போதும் செயலாற்றினான். இம்முறையிலே மதிப்பு மட்டும் குறையாமல் மைசூருக்குச் செல்வதற்கு வழிவகை என்ன என்று நஞ்சிராஜன் அவனை வேண்டினான்.

வாழ்க்கையில் முதல் தடவையாக, ஹைதர் தன் தனி முறையில் செயல் திட்டம் வகுக்க நேர்ந்தது. திருச்சிராப்பள்ளி