பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 191

ஓடியவர்களை விடாது துரத்தி வாளுக்கிரையாக்கினான், அல்லது உயிருடன் சிறைப்பிடித்தான். கங்காராம் பாரிய சங்கிலியைச் சுமந்து இழுத்தவண்ணம் மன்னர்முன் கொண்டு வரப்பட்டான்.

மைசூரில் ஹைதர் அடைந்துவந்த பெருமையும், அதனால் நஞ்சிராஜனுக்கு இருந்து வந்த மதிப்பும் அரண்மனையில் பலர் உள்ளத்தில் தீராப் பொறாமை ஊட்டியிருந்தது. இத்தகையவர்களில் நஞ்சிராஜனின் தம்பியாகிய தேவராஜன் ஒருவன். அவன் மறை சதிகளில் ஈடுபட்டிருந்து, ஒரு நாள் ஒரு படையுடன் அரண்மனையை வளைத்துக்கொண்டான். ஹைதருக்கும் நஞ்சிராஜனுக்கும் இது செய்தி எட்டுமுன், அரண்மனை வாயிலை நோக்கி பீரங்கிகள் முழங்கின. துப்பாக்கிக் குண்டுகளும் பீரங்கிக் குண்டுகளும் அரண்மனை மதில்களைத் துளைக்கத் தொடங்கின. ஆனால், நஞ்சிராஜனும் ஹைதரும் இவற்றை அறிந்து, விரைந்து வந்து கிளர்ச்சியை அடக்கினர்.

ஹைதர்அலி மைசூர் அரசின் பாதுகாப்பை உன்னி, தொலைவிடங்களிலிருந்து வீரர் பலரைக் கொணர்ந்து, படையை வலுப்படுத்தினான். பிரஞ்சுக்காரர் பலரைப் படையின் பயிற்சித் துறையிலும், அமைப்பாண்மைத் துறையிலும் அமர்வித்தான். அத்துடன் ஆர்க்காட்டில் முகமதலியால் அருமை அறியாது துரத்தப்பட்ட பல படைத்தலைவர்களை வரவழைத்து உயர் ஊதியத்தால் அவர்களைத் தன்னுடன் பிணைத்தான். இவர்களில் ஆசாத்கான், சர்தார் கான், முகமது உமர் முதலியவர்கள் முக்கியமானவர்கள். முகமது உமரின் புதல்வன் முகமத் அலியே ஹைதரின் பிற்கால வாழ்வில் மைசூரின் ஒப்பற்ற படைத் தலைவனானான்.

வளர்ந்துவரும் ஹைதரின் புகழ் கண்டு, வெளிநாட்டு எதிரிகளைவிட உள்நாட்டு எதிரிகள் கலங்கினர். அதேசமயம் அவனை நேரே எதிர்க்கவும் அஞ்சினர். நஞ்சிராஜனை அவன் இல்லாத சமயம் அகற்றுவதே அவன் வலுவைக் குறைக்க வழி என்று அவர்கள் திட்டமிட்டனர். அதைச் செயற்படுத்தவும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல், பாலக்காட்டுப் பகுதிகளில் சில கிளர்ச்சிகளை அடக்குவதற்காக, நஞ்சிராஜனும் ஹைதரும் சென்றிருந்தனர்.