பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
194 ||

அப்பாத்துரையம் - 6




மைசூர் மன்னன் நாட்டை வலுப்படுத்தி மராட்டியரை காட்டிலிருந்து துரத்தவே விரும்பினான். இம்முறையில் அவன் தன் குடிப்படைத் தலைவர்களை ஊக்க முயன்றான். ஆனால், அவர்கள் கோழைகளாகவும் தன்னலப் பேடிகளாகவும் காலங்கழித்தார்கள். மன்னனே முன்னணியில் நின்று போரிட வந்தாலல்லாமல், தாம் படைதிரட்ட முடியாது என்றனர். செய்வகை இன்னதென்றறியாது மன்னன் திகைத்தான்.

நிலைமையைச் சமாளிக்க வல்லவன் ஹைதர் ஒருவனே என்று மன்னனை அடுத்திருந்தவர்கள் கூறினர். அதன்மீது மன்னன் ஹைதரை அழைத்து, அவனை நாட்டின் முழுநிறை உரிமையுடைய படை முதல்வன் ஆக்கினான். மன்னனோடொத்த பொன்னணி மணி விருதுகளுடன் படை திரட்டல், குடிப்படைத் தலைவர்களுக்கு ஆணையிடல், கருவூலத்தையும் நாட்டுச் செலவாணியையும் கையாளல், வரி விதித்தல் ஆகிய சிறப்புரிமைகள் அவனுக்கு அளிக்கப்பட்டன.

படைத் துறையில் இச்சமயம் கணக்குகள் சீர்குலைத்திருந்தன. படைச் சம்பளத்தில் பலநாள் தவணைப் பாக்கிகள் இருந்தன. படைவீரர் பலவிடங்களில் கிளர்ச்சிகள் செய்தனர். எங்கும் அமளி குமளியாக இருந்தது. ஹைதர் கிளர்ச்சிக்காரரை அடக்கினான். வேண்டாத படை வீரரையும் படைத்துறைப் பணியாளரையும் கிளர்ச்சியைச் சாக்கிட்டே குறைத்தான். கணக்குகளை நேரடியாகச் சரிபார்த்து, எரிகிற விட்டில் ஆதாயம் தேட முற்பட்ட கணக்குகளை ஒழித்தான். நேர்மையான சம்பளப் பாக்கியில் ஒரு பகுதி கொடுத்து, மறுபகுதியை எதிரி நாட்டில் கொள்ளை மூலம் சரி செய்து கொள்ளும் உரிமை அளித்தான். இவ்வகையில் படைத்துறையில் அமைதி ஏற்பட்டது.

மராட்டியருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை ஹைதர் வேண்டுமென்றே கொடுக்காமல் கடத்தி வந்ததுடன், அதற்கீடாக அளிக்கப்பட்ட நிலப்பகுதியையும் கைக்கொண்டான். இச்செயல்களால் சீற்றங்கொண்ட பேஷ்வா, 1759-இல் கோபால் ராவ்ஹரி என்ற தம் படைத் தலைவனைப் பெரும்படையுடன் மைசூர் மீது ஏவினான்.