பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
208 ||

அப்பாத்துரையம் - 6



மன்னர் அதை ஆண்டனர். அவர்கள் லிங்காயதர், அதாவது வீர சைவ மரபினர். விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், இச்சேரி புதிய தலைநகராயிற்று. இச்சேரி நாயகர்கள் மைசூர் உடையார் களுடன் போட்டியிடத்தக்க வலிமை வாய்ந்த அரசர் ஆயினர். 1640-இல் சிவப்ப நாயகன் என்ற அரசன் தலைநகரைப் பேடனூர் அல்லது 'மூங்கில் நகர'த்துக்கு மாற்றி, அதை வெல்ல முடியாத கோட்டை ஆக்கினான். அவன் ஆட்சிக் காலத்தில் பேடனூரின் செல்வம் தென்னாடெங்கும் புகழ் பெற்றதாயிற்று. ஆட்சியும் மேல் கடற்கரை வரை பரந்திருந்தது.

1765-இல் பேடனூர் மன்னன் பசவப்ப நாயகன் மாண்டான் அவன் மனைவி வீரம்மா, எக்காரணத்தாலோ தன் மகன் சென்னபஸவையாவிடம் ஆட்சியைக் கொடுக்காமல் தானே ஆள முற்பட்டாள். சென்னபஸவையா கொல்லப்பட்டு விட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், சென்னபஸவையா தப்பியோடி ஹைதர் அலியிடம் உதவி கோரினான். அரசுரிமை பெற்றால் ஹைதரின் ஆளாக இருந்து ஆட்சி செய்வதாகவும், திறை செலுத்துவதாகவும் வாக்களித்தான்.

ஹைதரின் பேடனூர்ப் படையெடுப்பு 1763-இல் தொடங்கிற்று. தலைநகரை அணுகும் வரை அரசி ஒரு சிறிதும் கவலை கொள்ளவில்லை. காடுமலைகளைக் கடந்து எந்தப் படையும் அவ்விடம் வரமுடியாதென்ற துணிச்சலே அதற்குக் காரணம். ஆனால், இளவரசன் உதவியாலும் ஓர் அமைச்சன் உதவியாலும் படைகள் காட்டுவழியறிந்து விரைந்தன.கோட்டையை அணுகிய பின் அரசி பணிந்து சமாளிக்க முயன்றாள். ஆண்டுதோறும் ஓர் இலட்சம் வெள்ளி திறையளிப்பதாக வாக்களித்தாள். ஆனால், அரசுரிமை இழப்பதைத் தவிர வேறு எந்தத் திட்டத்துக்கும் ஹைதர் இணங்கவில்லை.

ஆளுபவரிடம் எத்தனை வேற்றுமை இருந்தாலும் அந்த மலைநாட்டு மக்களின் போர் உறுதியில் தளர்ச்சி எதுவும் இல்லை. அவர்களைக் கொல்வதுதான் எளிதாயிருந்தது; அடக்குவது எளிதாயில்லை. தலைநகர்க்கோட்டை முற்றுகை ஓர் ஆண்டு நீடித்தது. அதன் பின்னும், மறை சுரங்க வழி ஒன்றை உளவாளிகள் கண்டு கூறியதனாலேயே கோட்டை வீழ்ச்சியுற்றது. அரண்மனையைத் தானே தீக்கிரையாக்கி விட்டு,