பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 209

நகைநட்டுகளுடன் அரசி வேறு கோட்டைகளுக்கு ஓடினாள். ஆனால், இறுதியில் எல்லாக் கோட்டைகளும் பிடிபட்டன. அரசியும் அவள் நண்பர்களும் மதகிரிக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.

பேடனூரின் மலைநாட்டு மக்களே தொடக்கத்திருந்து ஹைதரின் படையின் மூலபலமாயிருந்து வந்தனர். மக்கள்வீரம், நாட்டின் வளம், அரணமைப்புக்கள் ஆகிய யாவுமே ஹைதருக்குப் பிடித்திருந்தன. ஆகவே, அவன் பேடனூரைத் தன் நேரடியாட்சிப் பகுதியாகவே சேர்த்துக் கொண்டான். மைசூர் அரசின் எல்லை விரிவுற்றது. அத்துடன் அவன் பேடனூரையே தன் தலைநகரம் ஆக்கிக் கொள்ள எண்ணியிருந்ததாக அறிகிறோம். இத்திட்டம் கைவிடப்பட்டாலும் அந்நகர்மீது அவனுக்கிருந்த ஆர்வம் என்றும் குறையவில்லை. அவன் அதன் பெயரை ஹைதர் நகர் என்று மாற்றியமைத்தான். நகரின் கட்டடங்களையும் தெரு அமைப்பையும் அழகுபடச் செப்பம் செய்தான். அங்கே ஒரு தனி அரண்மனை, ஒரு வெடி மருந்துச்சாலை, நாணயத் தம்பட்ட சாலை ஆகியவற்றை உண்டுபண்ணினான். நகருக்கு அருகாமையிலுள்ள கடற்கரையில் ஒரு புதிய துறைமுகத்தையும் கட்டமைத்தான்.

வெற்றியார்வத்துடன் புறப்பட்ட ஹைதர் உள்ளத்தில் பேடனூர், வாழ்க்கை ஆர்வத்தையும் ஆட்சியார்வத்தையும் தட்டி எழுப்பிற்று.

புதிய மைசூர் அரசின் புகழ்ந்தோரரை வளைவில் பேடனூர் நடுநாயக மணிக்கல்லாக அமைந்தது.

மைசூருடன் அமையாமல் பேரரசாட்சி அமைக்க வேண்டுமென்ற ஆர்வமும், தென்னாட்டு அரசியல் வாழ்வைச் சீரமைக்க அப்பேரரசை ஒரு கருவியாக்க வேண்டுமென்ற ஆர்வமும்தான் பேடனூரைத் தலைநகராக்க வேண்டுமென்ற முதலார்வத்தைக் கைவிடும்படி ஹைதரைத் தூண்டின. அவன் அரசியல் தொலை நோக்குக்கு இந்த ஆர்வத் துறவு ஒரு சீரிய சான்று ஆகும்.

பேடனூர் வெற்றியால் ஹைதருக்கு ஒன்றரைக் கோடி பொன்னுக்குக் குறையாத பெருஞ்செல்வம் கிடைத்ததென்று