பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
210 ||

அப்பாத்துரையம் - 6



கூறப்படுகிறது. இது இன்றைய மதிப்பில் பத்துக்கோடி வெள்ளிக்குமேல் ஆகிறது.

பேடனூர்ப் போரின்போது, சாவனூர் நவாப் அப்துல் ஹக்கீம் பேடனூர் அரசிக்கு உதவியளித்திருந்தான். ஏற்கெனவே சுரா மாகாணத்தின் வெற்றி மூலம் ஹைதர், மராட்டியர் பகைமையை விலைக்கு வாங்கியிருந்தான். சாவனூர் மராட்டியர் அரசை அடுத்திருந்ததனால், நட்பு முறையிலோ, எதிர்ப்பு முறையிலோ, அதைத் தன் பக்கமாக்கிக்கொள்ள ஹைதர் உறுதி கொண்டான்.நட்புறவை நவாப் ஏற்காததால், ஹைதர் படைகள் சாவனூர் மீது சென்றன. நாட்டின் பெரும் பகுதி அழிக்கப்பட்ட பின்னரே, நவாப் பணிந்து திறைசெலுத்த ஒப்புக் கொண்டான். அவனிடமிருந்தும் கோடிக்கணக்கான விலைமதிப்புடைய பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

இச்சமயம் ஆர்க்காட்டு நவாபின் எதிரியான சண்டாசாகிபின் மகன் மீர் ரஸா அலிகான் ஹைதரிடம் அலுவல் தேடிவந்தான். பிரஞ்சுப் போர் முறைகளிலும் பயிற்சிகளிலும் தேறிய அவனை ஹைதர் தன் பயிற்சிப் படைத் தலைவனாக்கிக் கொண்டான்.

ஹைதரின் படை முன்னேற்றங்கண்டு பேஷ்வா மாதவராவ் மனக் கொதிப்படைந்து, கோபால்ராவின் தலைமையில் ஒரு படையை அனுப்பினான். ஹைதரின் படை, அளவில் சிறிதாயிருந்தாலும், ஹைதரின் தலைமைத் திறமையால் பல களங்களில் வெற்றி கண்டது. கோபால்ராவ் மனமுடைந்து திரும்பவேண்டியதாயிற்று. ஆனால், விரைவில் பேஷ்வா தன் மூல பலம் முழுவதும் திரட்டிக்கொண்டு மைசூர் மீது படையெடுத்தான். சாவனூருக்குத் தெற்கே ரத்திஹள்ளி என்ற இடத்தில் ஒரு கடும்போர் நிகழ்ந்தது. ஹைதர் போர் முறைகள் பலவற்றைத் திறம்படக் கையாண்டும், மராட்டியர் பெரும்படைமுன் முழுத்தோல்வி ஏற்க வேண்டியதாயிற்று. ஒரு சில குதிரை வீரருடன் பேடனூர்க் காடுகளுக்குள் ஓடித்தான் ஹைதர் உயிர் தப்ப வேண்டியிருந்தது.

மராட்டியப் படைகள் மைசூர்ப் பகுதி முழுவதும் பரவி ஹைதரை மென்மேலும் நெருக்கின. குடும்பத்தையும் குடும்பச் செல்வக் குவியலையும் சீரங்கபட்டணத்துக்கு அனுப்பி விட்டு,