பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 211

ஹைதர் நேர் உடன்படிக்கை கோரினான். இந்த ஒரு தடவை உடன்படிக்கையின் கட்டுப்பாடுகள் அவனுக்கு முற்றிலும் பாதகமாய் இருந்தன. அவன் சாவனூரையும் மொராரிராவிடமிருந்து முன்பு கைப்பற்றிய குத்திப் பகுதியையும் விட்டுக்கொடுக்க இணக்கமளித்தான். அத்துடன் போர் இழப்பீடாக 32 இலட்சம் வெள்ளி கொடுக்க வேண்டி வந்தது. ஆயினும், ஹைதரின் சுரா மாகாண வெற்றியும் பிற ஆட்சிப் பகுதிகளும் அவனிடமே விட்டு வைக்கப்பட்டன. தோல்வி இடையேயும் அவன் வீரத்துக்குக் கிடைத்த மதிப்பே இது.

தோல்வி காணாத வீரன் ஹைதரின் புகழ் மராட்டியப் போரின் தோல்வியால் வளர்ந்ததேயன்றிக் குறையவில்லை. ஏனென்றால், இத்தோல்வி, அடுத்த வெற்றிப் பாய்ச்சலுக்கான ஒரு பதுங்கலாக மட்டுமே அமைந்தது. படைகளின் அளவால் பன்மடங்கு மேம்பட்ட எதிரி. முகம் திரும்பிய மறுகணமே ஹைதர் விரைந்து தன் நாட்டைச் சீர் செய்து கொண்டு அடுத்த வெற்றிப் பாய்ச்சலுக்குக் கிளம்பினான். இத்தடவை அவன் நாட்டம் மேற்கு மலையாளக்கரை நோக்கிற்று.

மேற்குக் கரைப் பகுதி கி.பி. 9-ஆம் நூற்றாண்டுவரை முத்தமிழ் நாடுகளில் ஒன்றாகிய சேரநாடாயிருந்தது. ஆனால், அந்நூற்றாண்டில் சேரப் பேரரசு வீழ்ச்சியடைந்து பல சிற்றரசுகளாயின. தெற்கே, வேணாடு அல்லது திருவாங்கூர், உதயவர் மரபினராலும், அதன் வடபால் கொச்சி, பெரும் படப்பு மரபினராலும், கள்ளிக்கோட்டை, சாமூதிரி மரபினராலும், வடகோடியிலுள்ள சிரக்கல், கோலத்திரி மரபினராலும் ஆளப்பட்டது.விஜயநகர ஆட்சிக்காலத்தில் புதிதாகக் கடல் வழி கண்டு மேனாட்டுக் கடலோடி வாஸ்கோடகாமா வந்து தென்னாட்டில் இறங்கிய பகுதி, கள்ளிக்கோட்டையே. முதல் முதல் மேனாட்டினருடன் தொடர்பு கொண்ட கீழை உலக மன்னனும் சாமூதிரியே.

மலையாளக் கரையின் மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் நாயர்கள். அவர்கள் போரையே தங்கள் வாழ்வாகக் கொண்ட மறக்குடியினர். 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் புதிய இஸ்லாம் நெறியும் அராபியர் குடியேற்றமும் வடமலையாளக் கரையில் ஏற்பட்டது. அராபியரும் நாட்டுக் குடிகளும்