பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
212 ||

அப்பாத்துரையம் - 6



கலப்புற்றபின் மலையாளநாட்டு இஸ்லாமியர் மாப்பிள்ளைகள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களும் நாயர்களைப்போலவே வீரமுடையவர் களாயிருந்தனர். ஹைதர் நாட்களில் சிரக்கல் தலைவனும், அலிராஜன் என்ற ஒரு இஸ்லாமியனாகவே இருந்தான்.

1757-இல் ஹைதர் நஞ்சிராஜனுடன் தமிழகப் போர்களில் ஈடுபட்டிருந்தான். அச்சமயம் அவன் மலையாளக் கரையில் படையெடுத்துத் திறை பிரித்த செய்தி மேலே கூறப்பட்டுள்ளது. சாமூதிரி அரசருக்கும் பாலக்காட்டு அரசருக்கும் இருந்த போட்டி அச்சமயம் ஹைதருக்கு உதவிற்று.பாலக்காட்டு அரசன் பணிந்து நண்பனானான். அவன் உதவியுடன் சாமூதிரி முறியடிக்கப் பட்டு, திறை செலுத்திப் பணிந்தான். ஆண்டுதோறும் திறை செலுத்துவதாகவும் இரு மன்னரும் வாக்களித்தனர். போட்டி காரணமாகப் பாலக்காட்டரசன் அவ்வப்போது இதை அனுப்பிவந்தாலும், சாமூதிரி இதை விரைவில் நிறுத்தினான். மைசூர் அரசியல் வாழ்வு வேறு திசையில் சென்றதாலும், மராட்டியர் படையெடுப்பாலும் ஹைதர் இப்பக்கம் திரும்பவில்லை. ஆனால், 1765-ல் மராட்டியப் படை திரும்பியவுடன், அவன் சாமூதிரியிடம் திறை கோரினான். சாமூதிரி மறுத்துவிடவே, ஹைதர் படையெடுப்புத் தொடங்கிற்று.

முதலில் மைசூர்ப் படைகள் பேடனூர் வழி, மேல்கரையின் வடகோடி சென்றன. தளவாடங்களைக் கடல் வழி அனுப்பி விட்டு, ஹைதர் கரை வழியாகக் குடகுமீது படையெடுத்தான். ஒன்றிரண்டு குடி மன்னர் எதிர்த்து வீழ்ச்சியடைந்தபின், மற்றவர்கள் பணிந்தனர். கண்ணனூரிலுள்ள அலிராஜன் பணிந்ததுடனன்றி, ஹைதருக்கு நண்பனாகி அவன் படைகளுக்கு வழி காட்டி உதவினான்.

மலையாளக் கரைப் போராட்டத்தில் ஹைதர் படைகளுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டது. பல அடர்ந்த சதுப்பு நிலக் காடுகள் தாண்டிப் படைகள் செல்ல வேண்டியிருந்தது. நாயர் வீரர்களும் அங்குலம் அங்குலமாக அவர்கள் முற்போக்கை மூர்க்கமாகத் தடுத்து நின்றனர். ஆனால், இறுதியில் படைகள் கள்ளிக்கோட்டையை அணுகின. சாமூதிரி இத்தடவை எளிதில்