பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. ஆங்கிலேயருடன் போர்

ஹைதர் ஒரு சிறந்த போர் வீரன்; ஆனால், அவன் வெறியன் அல்லன். அவன் வாழ்க்கையையும் சூழலையும் உற்று நோக்குபவர்களுக்கு இது எளிதில் விளங்கும். 18-ஆம் நூற்றாண்டில் தென்னாட்டில், போர் விலக்க முடியாத ஒன்றாயிருந்தது. அதிலிருந்து ஓர் அரசு ஒரு சிறிது ஓய்வு பெற வேண்டுமானால் கூட, அது வலிமை வாய்ந்த அரசாகவும், ஓரளவு பேரரசாகவும் இருந்து தீர வேண்டும். ஹைதர் காலத்துக்கு முன்பே தளர்ந்து நொறுங்கிக்கொண்டிருந்த மைசூர் அரசை அத்தகைய வலிமை வாய்ந்த அரசாக்குவதிலேயே ஹைதரின் தொடக்கக் காலப் போர்கள் முனைந்திருந்தன. ஆனால், அந்த நிலை அடைந்த பின்னும் மைசூர், போர் இல்லாமல் இருக்க முடியவில்லை.இதற்குப் பேரளவு மராட்டியப் பேரரசின் பண்பும், நிஜாம், ஆர்க்காட்டு நவாப் ஆகியவர்களின் பண்புமே காரணங்கள்.

மராட்டியப் பேரரசைக் கைக்கொண்டிருந்த பேஷ்வா மரபினர் பேரரசாட்சியின் எல்லை விரிவை விரும்பியவர்களல்ல. அவர்கள் விரும்பியது சூழ்ந்துள்ள நாடுகளைக் கொள்ளை யிடுவதே. அவர்களுக்குப் பேரரசு என்பது இத்தகைய ஒரு கொள்ளைப் படைக்கான மூலதளம் மட்டுமே! நிஜாமும் ஆர்க்காட்டு நவாபும் தமக்கென வலுவும் கொள்கையும் அற்ற அரசுகள். ஆங்கிலேயரையும் பிரஞ்சுக்காரரையும் மோதவிட்ட அவர்கள் வளர எண்ணினர். இந்நிலை தென்னாட்டின் விடுதலைக்குச் சாவுமணி அடித்துவிடும் என்பதை ஹைதர் தெளிவாக உணர்ந்தான். அவன் பிற்காலப் போர்களின் போக்கைக் கவனித்தால் இது விளங்கும். ஆகவே, அப்போர்கள் மைசூர் அரசுக்கான போர்களோ, பேரரசுக்கான போர்களோ அல்ல. அவை தேசீயப் போர்கள்.