பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
220 ||

அப்பாத்துரையம் - 6



மலையில் படைகளுக்கு வேண்டிய உணவும் தளவாடமும் சேகரித்து னத்திருப்பதாக அவன் கூறியிருந்தான். இதை நம்பி ஸ்மித் அவ்விடம் சென்று காத்திருந்தான். எத்தகைய தளவாடமும் கிட்டவில்லை. ஆனால், இதே நம்பிக்கையுடன் அங்கே வந்திருந்த படைத் தலைவர் 'உட்'டின் வீரருடன் ஸ்மித் கலக்க முடிந்தது. அவர்கள் மொத்தப் படைபலம் இப்போது 1,030 குதிரை வீரரும், 5,800 காலாள் வீரரும் ஆவர். 16 பீரங்கிகளும் இருந்தன.

திருவண்ணாமலையில் ஆங்கிலேயரை ஹைதர் தாக்கினான். போர்க்களத்தில் ஆங்கிலேயர் எதிர்ப்பைச் சமாளித்து நின்றனர். ஹைதர் படைகள் பின்னடைந்தன. ஆனால், ஆங்கிலேயருக்கு உணவு, தளவாட உதவி எதுவும் வராமல் மைசூர்ப் படைகள் தடுத்தன. தம் கையில் பட்ட தளவாடங்களால் மைசூர்ப் படைகளின் நிலை மேன்மேலும் நலமடைந்தது.

1767-இல் தொடங்கிய போராட்டம் அந்த ஆண்டு இறுதிக்குள் பலவகையில் மாறுதலடைந்தது. சிங்காரப் பேட்டையருகே ஆங்கில உதவிப்படை ஒன்றைத் தாக்கும்போது, ஹைதர் படைக்குப் பெருஞ்சேதம் விளைந்தது. ஹைதர் குதிரை சுடப்பட்டு விழுந்ததனால், அவன் உயிர் மயிரிழையளவே தப்பிப் பிழைத்தது. தவிர, அவன் கீழ் திசைப் போர் ஈடுபாடறிந்த மலையாளக்கரைக் குடி மன்னர் கிளர்ந்தெழுந்ததாக அவன் கேள்விப்பட்டான். திப்புவின் தலைமையில் அவன் ஒரு படை அனுப்பி, அங்கே நிலைமையைச் சமாளித்தாலும், மதுரையிலிருந்தும் பம்பாயிலிருந்தும் ஆங்கிலேயர் அத்திசையில் கலவரங்களைக் கிளறிக் கொண்டேயிருந்தனர். பம்பாய்ப் படை மங்களூரைப் பிடித்ததாகத் தெரியவரவே, ஹைதர் திடுமென இரு கடற்கரைகளின் பக்கமும் போராட வேண்டி வந்தது. ஆனால், அவன் பெற்ற போர்த்திறமை அவையனைத்தையும் இடைவிடா முயற்சியுடன் சமாளித்தது. மங்களூரைச் சென்று மீட்டு, எவரும் எதிர்பாரா வகையில் அவன் கிழக்கே தன் படைகளுக்கு உதவ முன்வந்து, இவ்வியத்தகு விரைவின் மூலமே எதிரிகளின் உள்ளத்தில் அதிர்வேட்டுக்களை உண்டு பண்ணினான்.