பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 221


ஓர் ஆங்கிலப் படை நிஜாம் பகுதி மீதே தாக்கத் தொடங்கிற்று. இது கேட்ட நிஜாம் தாயகத்துக்கு ஓடினான். ஆனால், அவன் ஓடியதுடன் அமையவில்லை. எவ்வளவு எளிதாக அவன் முன்பு ஆங்கிலேயர் உறவைக் கைவிட்டானோ, அதைவிட எளிதாக இப்போது அவன் ஹைதர் உறவை முன்னறிவிப்பின்றி ஒழித்துவிட்டு ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்து கொண்டான்.

நிஜாமின் துணை நீங்கியதால் ஹைதருக்கு உண்மையில் வலு மிகுந்ததென்றே கூறவேண்டும். ஏனென்றால், கடல் போன்ற நிஜாம் படைகளுடன் ணைந்து நின்ற போது கிட்டாத வியத்தகு வெற்றிகள் அதன் துணை அகன்ற பின்னரே ஹைதருக்குக் கிட்டின. கிட்டத்தட்ட வடதமிழக முழுவதும் அவன் வாள்போல் சுழன்று சுழன்று சென்று, முகமதலியின் வலிமைமிக்க கோட்டைகள் பலவற்றையும் கைப்பற்றினான். ஆங்கிலேயர் உதவிப் படைகள் எதுவும் இடம் விட்டு இடம் பெயர முடியாமல் அவற்றை அவன் சிதறடித்தான். இரண்டாண்டுகள் ஆங்கிலேயர் போக்கு வரவு முற்றிலும் கடல் வழியாகவே நடந்தது. கரையாதிக்கம் முழுவதும் ஹைதர் படைகளின் வசமாயிருந்தது.

பண்டைத்தமிழரசுகளைப்போல் ஹைதரிடம் கடற்படையும் இருந்திருந்தால், மைசூர்ப் போருடன் ஆங்கில ஆட்சிக்கு ஒரு முடிவு ஏற்பட்டிருக்கும்!

ஹைதர் மேல்திசையிலிருந்து திரும்புவதற்குள் ஹைதர் வென்ற தமிழகப் பகுதி முழுவதையும் மீட்டுவிட ஆங்கிலேயர் பெருமுயற்சிகள் செய்தனர். அதற்காகவே ஹைதரின் எதிரியாகிய குத்தி மராட்டியத் தலைவன் மொராரி ராவையும் அவர்கள் பணம் பேசி வரவழைத்தனர். ஆனால், அவன் படைகள் வந்து சேருவதற்குள் ஹைதர் மின்னலெனத் தமிழக எல்லையுள் குதித்தான்.

இந்துஸ்தானியில் 'புலி' என்ற பொருளுடைய ‘ஹைதர்’ என்ற சொல் மலையாளிகளிடையே 'புலி'யால் நேர்ந்த கிலியையே தந்திருந்தது.1768-ஆம் ஆண்டில் ஆங்கிலேயருக்கும் அது அதே கிலியை உண்டுபண்ணிற்று. மேலை நாட்டில் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அழுகின்ற ஆங்கிலக்