பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
228 ||

அப்பாத்துரையம் - 6



கலைந்து சிதறின. அழிவும் சித்திரவதையும் தொடங்கிற்று. ஒவ்வொருவரும் உயிருக்கு அஞ்சித் தனித்தனி வேறு வேறு திசையில் ஓடத் தலைப்பட்டனர்.

ஹைதர் ஒருபுறம் தனியாகத் தப்பிப் பிழைத்து ஓடிச் சீரங்கப்பட்டணம் சென்றான். அதே சமயம் திப்புவை எங்கும் காணாத கவலை, ஓடியவர் உள்ளங்களில் புயலிடையே புயல் வீசிற்று. மறுநாள் ஆண்டியுருவில் திப்பு தப்பி வந்தபின் தான் அவர்களுக்கு உயிர் வந்தது.

அழிவிலும் அருஞ்செயல் செய்து புகழ் பெற்றவர் ஹைதர் தரப்பில் இரண்டே இரண்டு பேர்கள்தான். ஒருவன் படைத்தலைவன் பஸ்ஸுல்லாகான். அவன் ஒரு சிறு பிரிவுடன் எதிரிகளின் அணிகளையே பிளந்துகொண்டு தன் அணி குலையாமல் சீரங்கப்பட்டணம் வந்து சேர்ந்தான். ஹைதர் தன் அவமானத்தைக்கூட மறந்து அவனை ஆரக்கட்டித் தழுவிக் கொண்டான்.

சர்ச் கூலி மலைப்போரில் பெரும் புகழ் நாட்டிய மற்றொரு வீரன் யாஸின்கான் என்பவன். அவன் உருவிலும் தோற்றத்திலும் ஹைதரைப் பெரிதும் ஒத்திருந்தான். மைசூர்ப் படைகள் ஓடத் தலைப்பட்டபோது எதிரிகள் குறிப்பாக ஹைதரைக் கைப்பற்ற எங்கும் திரிந்துகொண்டிருந்தனர். தன் அரசனைக் காக்க யாஸின் கான் ஒரு சூழ்ச்சி செய்தான். தானே ஹைதர் என்ற முறையில் கூக்குரலிட்டு அவன் நடிப்புக் காட்டினான். சூழ்ச்சி பலித்தது. மராட்டியர் அவனே ஹைதர் என்று எண்ணிப் பலத்த காவலுடன் அவனைக் கொண்டு சென்றனர். திரியம்பகராவ் அவனையே ஹைதரென்று நினைத்து, அவனை மதிப்புடனும் அன்புடனும் நடத்தினான். துன்ப காலத்தில் அவன் நட்பைப் பெற்று அவனைத் தன் வசமாக்கிவிட அரும்பாடுபட்டான்.

ஹைதர் சீரங்கப் பட்டணத்தில் இருந்து அடுத்த போராட்டத்துக்கு ஆள் திரட்டுவது கேட்டதும், மராட்டியப் படைத் தலைவன் தான் ஏமாற்றமடைந்ததற்கு வெட்கி, யாஸின்கானை விடுதலை செய்தான்.

மேலுக்கோட்டை பேர் பெற்ற புண்ணியக் கோயில். தென்கலை வைணவரின் தலைமைத் திருப்பதிகளில் அது ஒன்று.