பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 237

நிஜாமுக்கெதிராக ஆங்கிலேயரைத் தூண்டியவன் ஆர்க்காட்டு நவாப் முகமதலியேயாவான். நிஜாம், வடசர்க்கார் என்ற ஆந்திரக் கரையோரப் பகுதியின் உரிமையாளன். அதில் குண்டூரை நிஜாம் மனமாரத் தன் தமையன் பஸாலத் ஜங்குக்கு விட்டுக் கொடுத்திருந்தான். ஆனால், முகமதலியின் சூழ்ச்சியால், 1778-ல் ஆங்கிலேயர் நிஜாமைக் கலக்காமல் அதைத் தமக்கென ஆண்டுக் குத்தகையாகப் பெற்று, முகமதலியிடமே அதை வழங்கினர்.நிஜாமின் மேலுரிமை, நில உரிமை ஆகியவற்றுடன் அவன் குடியுரிமையும் இங்கே மிதித்துத் துவைக்கப்பட்டது. நிஜாம் இதைக் கண்டித்தபோது, ஆங்கிலேயர் வாளா இருந்ததுடன் நில்லாது, ஆண்டுக் குத்தகைத் தொகையும் இனித்தரப்படமாட்டாது என்று இறுமாப்புடன் கூறினர். இதுவே, ஆங்கிலேயர் மீது நிஜாமுக்கு ஏற்பட்ட உள்ளக் குமுறலுக்குக் காரணம்.

மராட்டியரும் நிஜாமும் ஆர்க்காட்டு நவாபைப் போல ஆங்கிலேயரின் கூலியாட்கள் ஆய்விடவில்லை. ஆயினும், அவர்கள் ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு நேராகவோ மறைமுகமாக வோ ஆக்கமளித்த அடிமைகளாகவே இருந்துவந்தனர். வளர்ந்து வந்த ஆங்கில ஆதிக்கம் இவ்வடிமைகளையே நட்பிணக்கத்துடன் மதிக்கவில்லையென்றால், நாட்டின் தலைசிறந்த வல்லரசாக வளர்ந்துவந்த மைசூர் மன்னன் ஹைதரை நேசிப்பார்களென்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆனால், ஹைதரிடம் அவர்கள் நடந்துகொண்ட முறை பகைமை முறைமட்டுமல்ல; அவனையும் அவன் மூலமாகத் தென்னாட்டுத் தேசீயத்தையும் மதியாத அயலார் ஆதிக்கப் போக்காகவே அது அமைந்தது.

ஹைதர் அரசியல் நேர்மையை எல்லாரிடமும் எதிர்பார்த்தவன். பிரெஞ்சுக்காரரிடம் அந்த நேர்மையே அவன் மதிப்பையும் பற்றையும் வளர்த்தது. தனி மனிதர் வகையில் ஆங்கிலேயரிடமும் அவன் அதே மதிப்பு வைத்திருந்தான். ஆனால், ஆங்கில அரசியல் ஆதிக்கக் குழுவினர் அந்த நேர்மையையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தவர்களாகத் தோன்றவில்லை. 1769-இல் ஹைதருடன் செய்துகொண்ட உடன்படிக்கையை அச்சத்தால் செய்து கொண்ட உடன்படிக்கை என்று அவர்கள் வெட்கமில்லாமல் கூறினர். அதே சமயம்