பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
238 ||

அப்பாத்துரையம் - 6



சென்னை அரசியலை மதியாது இங்கிலாந்திலுள்ள வாணிகக் குழுவுடன் நேரடியாகத் தொடர்பு நாடிய முகம்மதலியைக் கெஞ்சி வாழ அதே அரசியலார் கூசவில்லை!

ஹைதர் அலியின் ஒப்பந்தத்தை ஒழித்து, அவனை எதிர்த்தழிக்க வேண்டுமென்று முகமதலி இங்கிலாந்திலுள்ள பிரிட்டிஷ் வாணிகக் குழுவினிடம் வாதாடினான். ஆனால், அதே நாவால் ஹைதரிடம் ஆங்கிலேயரைத் தென்னாட்டை விட்டுத் துரத்தத் தன்னுடன் ஒத்துழைக்கும்படி கோரிக்கையிட்டான்! ஹைதர் அவன் குள்ளநரிப் பண்பை அறிந்தவனாதலால், செய்தியை ஆங்கிலேயருக்குத் தெரிவித்திருந்தான். ஆனால், வாய்மையையும் நேர்மையையும், நம்பாத மனிதர் அன்று சென்னையில் ஆங்கில ஆட்சியாளராய் அமர்ந்து இருந்தனர்.

வளர்கின்ற தன் தென்னக வல்லரசுக்கு ஹைதர் வெடி மருந்தும் போர்ச் சாதனங்களும் பெற விரும்பினான். ஆங்கிலேய ருடன் ஒப்பந்தம் செய்வதன் மூலம் அவர்கள் நேசத்தால் இதைப் பெற அவன் மிகவும் முயன்றான். இது முடியாதென்று கண்டபின், அவன் மாகியிலுள்ள பிரெஞ்சுக்காரரிடமிருந்து இவ்வுதவியைப் பெற்று வந்தான். ஆனால், 1778-இல் ஆங்கிலேயர் மாகியைக்கைப்பற்றியிருந்தனர். மலபார் உட்படத் தென்னாட்டின் மேலுரிமையுடைய பேரரசன் என்ற ஹைதர் நிலைக்கும் அவன் பேரரசின் தேவைக்கும் இது குந்தகமாயிருந்தது. தவிர, மாகியில் உள்ள தன் உரிமை காரணமாக, அதன் பாதுகாப்பில் ஹைதர் வீரரும் பங்கு கொண்டிருந்தனர். மாகியை ஆங்கிலேயர் தாக்கினால், தான் ஆர்க்காட்டைத் தாக்க வேண்டிவரும் என்றுகூட அது தாக்கப்படுமுன் ஹைதர் எச்சரித்திருந்தான். ஆங்கிலேயர் காதில் இவை ஒன்றும் ஏறவில்லை.

கடைசியாக, குண்டூரை ஆங்கிலேயர் கைப்பற்றியபோது, ஆங்கிலப் படைகள் ஹைதரின் இணக்கம் பெறாமலே ஹைதரின் ஆட்சிப்பகுதி வழியாக அவ்விடத்திற்கு அனுப்பப்பட்டன. இது ஹைதரின் ஆட்சியுரிமைக்கு எதிரானது. குண்டூர் முகமதலிக்குக் கொடுக்கப்பட்டபோதும், நிஜாமைப்போலவே ஹைதர் மனக்குமுறல் அடைந்தான். ஏனெனில், முகமதலியை அவன் தன் எதிரியாக மட்டுமன்றி, தன் மாநிலத் தாயகமாகிய தென்னகத்துக்கும், மனித சமுதாயத்துக்குமே எதிரி எனக் கருதினான்.