பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏற்படுத்திய தீவிரக் கட்சிக்குத் தேசீய முன்னணிக் கட்சி எனப் பெயரமைந்தது பொருத்தமேயாகுமன்றோ?

இருபோர் வீரர் : போஸும், வ.உ.சி.யும்

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளரை எதிர்த்து இயக்கங்களை நடத்தியவர் பலர். ஆனால், அவ் ஆட்சியை நேரடியாக எதிர்க்கத் துணிந்தவர் இருவரே. இவர்களுள் காலத்தால் முந்தியவர் 'கப்பலோட்டிய தமிழர்’ என்று விதந்து கூறப்படும் வ.உ.சிதம்பரனார். மற்றவர் கிழக்காசியாவிலிருந்து கொண்டு இந்தியாவின் வீரக்கொடியை வானளாவப் பறக்கவிட்ட வீரர் சுபாஷ் போஸ். வ.உ.சி. பிரிட்டிஷார் கப்பல் தொழிலையும் கடல் வாணிகத்தையும் எதிர்ப்பதன் மூலம் ஆட்சியை எதிர்க்க முனைந்தார். ஆனால் போஸ் தரைப்படையும், கடற்படையும் விமானப்படையும் திரட்டிப் பிரிட்டிஷாரைப் போர்க்களத்திலேயே எதிர்த்த மாவீரர். உலகின் முதல்தர வல்லரசுகளுக்குத் தாக்குப் பிடித்த பிரிட்டிஷ் பேரரசு அவர் தாக்குதலால் அசைவுற்றது. அவர் வீர வெற்றி கண்டு உலகம் வியப்பும் மகிழ்ச்சியும் கொண்டது. 'செயற்கரிய செய்த பெரியார்’ என அவரைப் பாராட்டியது.

போஸின் வாழ்க்கை இந்தியாவுக்குப் பொதுவாகவும் அவரை ஈன்ற வங்க நாட்டிற்குச் சிறப்பாகவும் பெருமைதர வல்லது. வ.உ.சி.யின் வீரத்தால் தமிழகம் ஒளி பெறுவது போல, போஸ் வீரத்தால் வங்கம் புகழொளி வீசுகிறது. ஆனால் வங்கத்திற்கு அடுத்தபடி போஸ் வெற்றியில் தமிழகம் பெருமை கொள்ளத்தகும். ஏனெனில் போஸின் விடுதலைப் படையான இந்திய தேசிய ராணுவத்தில் பெரும்பாலராகச் சேர்ந்து உழைத்தவர்களும் அதற்குப் பெரும் பொருளுதவி செய்தவர்களும் தமிழர்களே.

இந்திய விடுதலைப் போர்களும் தமிழகமும்

வட நாட்டில் 1858-இல் முதல் விடுதலைப் போராட்டம் எழுவதற்கு நெடுநாள் முன்னரே. தமிழகம் வெள்ளையராட்சியை எதிர்த்துப் பாஞ்சாலங்குறிச்சியில் மறப்போராற்றிப் பெருமை யுற்றது. அதனுடன் இந்தியாவுக்கு வெளியேயுள்ள பிறநாட்டு