பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 241

கிழத்தலைவனை அனுப்பினான். ஹைதர் ஆர்க்காட்டையும், ஆம்பூரையும் கைப்பற்ற முடிந்தது. ஆனால், வந்தவாசி நீடித்த முற்றுகையைச் சமாளித்த பின், 'கூட்' அதை விடுவித்தான். அதன்பின் அவன் கடலூரை நோக்கிச் சென்றான். ஹைதர் ‘கூட்'டின் படைக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டே சென்று போர்ட்டோ நோவோவில் அவனுடன் கைகலந்தான். இதில் ஹைதருக்கு மிகவும் படையழிவு நேர்ந்தது. ஆனால், பேரம்பாக்கத்தில் நடந்த அடுத்த கைகலப்பில் இரு சாராரும் சலிப்படைந்தனர். அத்துடன் ஹைதரின் வேலூர் முற்றுகையைத் தடுக்க முடியாததால், 'கூட்' சென்னைக்குத் திருப்பியழைக்கப்பட்டான்.

இச்சமயம் ஆங்கிலேயருக்கும் டச்சுக்காரருக்கும் போர் மூண்டது. ஹைதர் உடனே நாகப்பட்டணத்திலுள்ள டச்சுக் காரருடன் ஒப்பந்தம் செய்துகொண்டான். ஆனால், ஆங்கிலப் படைத்தலைவன் கர்னல் பிரேயித்வைட் நாகப்பட்டணத்தைச் சூழ்ந்த தஞ்சை மாவட்டப் பகுதிகள் முழுவதையும் கைப்பற்றினான். எனினும், 1782-இல் திப்புவின் கையில் அவன் படை பெருந்தோல்வி கண்டது. அவனும் சிறைப்பட்டான்.

ஆங்கிலேயருடன் இவ்வாறு ஹைதர் தனித்து நின்று போராடிச் சமாளித்து வந்தான். அவனுடன் சேர்ந்து படையெடுப்பதாகக் கூறிய நிஜாமும் மராட்டியரும் ஓர் அடிகூடப் பெயரவில்லை.

அரசியல் தந்திரியான வாரன்ஹேஸ்டிங்ஸ் குண்டூரை முகமதலியிடம் விட்டுவைக்கப்படாது என்று சென்னை அரசியலாருக்கு உத்திரவிட்டான். இச்சிறு செயலால் நிஜாமின் சீற்றம் தணிந்துவிட்டது. சிறு சுமையகற்றப் பெற்ற ஒட்டகம் களிப்புடன் எழுந்து ஓடியதுபோல, இச்சிறு தயவுக்கு நிஜாம் வால் குழைத்து மகிழ்ந்தான்.

இதுபோலவே ஆங்கிலப் படையொன்று மராட்டிய நிலத்தில் நுழைந்ததுமே மராட்டியர் மனமாறிவிட்டனர்; 1782- இல் ஆங்கிலேயருடன் அவர்கள் சால்பே ஒப்பந்தம் என்ற உடன்படிக்கை செய்துகொண்டனர். அதன்படி அவர்கள் ஹைதருடன் முன் செய்த ஒப்பந்தத்தின் வாசகங்களை மறுதலித்து, விடுதலைப் போரில் எதிரிகளின் கையாட்களாக மாறினர்.