பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
242 ||

அப்பாத்துரையம் - 6




ஹைதருக்கு உதவியாகப் பிரஞ்சுத் துருப்புகள் கடல் வழியாக பிரான்சிலிருந்து வந்தன. ஆனால், இறங்குமுன் ஆங்கிலக் கடற்படைகளுடன் அவை மோதின. இப்போர்களில் அலைக்கழிக்கப்பட்ட படையின் ஒரு பகுதியே போர்ட்டோ நோவோவில் இறங்கிற்று. இதன்பின் ஆங்கிலேயரும் பிரஞ்சுக் காரரும் ஒருங்கே தளர்வுற்றுப் போனதால், இருவருமே நேருக்குநேர் போராட்டத்தில் ஈடுபட விரும்பாமல் மறைமுக எதிர்ப்பில் நாட்கழித்தனர்.

‘கூட்’ஆரணியைத் திடுமென முற்றுகை செய்ய முனைந்தான். ஆனால், ஹைதர் விரைந்து ஆங்கிலப் படையணிகளைச் சிதறடித்தான். சென்னையில் ஆங்கிலேயர் வலுத்தளர்வது கண்டு, பம்பாய் அரசியலார் கடல் வழியாக மலபாரைத் தாக்கினர். ஹைதர் மலபாருக்குத் திப்புவை அனுப்பினான். இங்கே சில நாட்கள் எதிரியுடன் திப்பு போராடிக் கொண்டிருந்தான்.

மழைக் காலம் வந்தபின் போரில் எல்லாக் கட்சியினரும் தாமாக ஓய்வுற்றுப் போரைத் தளரவிட்டனர். ஆனால், ஹைதர் தளர்ச்சிக்கு ஒரு தனிக் காரணம் இருந்தது.

ஹைதர் உடல் உரம் வியக்கத்தக்கதானாலும், ஓயாத போர் முயற்சியால் உள்ளூர முறிவுற்றிருந்தது. முதுகில் ஏற்பட்ட ஒரு புற்று இப்போது அவனுக்கு ஓயாத தொல்லை தந்தது. மருத்துவர் முயற்சிகள் எவையும் பலிக்காது போன பின், ஹைதர் நோயை எல்லாரிடமிருந்தும் மறைத்துக் கடமையில் ஈடுபட்டிருந்தான்.

ஆரணிப் போருக்குப் பின் ஆங்கிலேயரின் முதுபெரும் படைத்தலைவர் ‘கூட்’ உயிர் நீத்தான். அதனையடுத்து 1782, டிசம்பர் 7-ஆம் நாள் ஹைதரின் வீர ஆவியும் சித்தூர் அருகிலுள்ள நரசிங்கராயன் பேட்டைக் கூடாரத்தில் அகன்றது.

ஹைதரின் ஏற்பாட்டினால், புதிய அரசியல் ஏற்பாடு முடியும்வரை அவன் மறைவு எவருக்கும் தெரியாமல் வைக்கப்பட்டது. தந்தை உடனடியாக அழைப்பதாக மட்டும் திப்புவுக்கு ஆணைபிறந்தது. திப்பு வந்து, தந்தையின் ஆணைப்படி மறைவாக