பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 245

பட்டுள்ளது.அத்துடன் முரடன், கொடியவன், அரசியல் சூதாடி, மைசூர் அரசமரபைக் கவிழ்த்து மன்னுரிமையைக் கைப்பற்றியவன் என்றெல்லாம் ஆங்கில வரலாற்றாசிரியரும் எழுத்தாளரும் பேச்சாளரும் ஹைதரின் மாறாட்ட ஓவியந்தீட்டி, அவன் மெய்யுருவைத் திரித்துள்ளனர். இவ்வளவும் கடந்து இன்றுகூட மைசூர் மக்களிடையே ஹைதர் பெயருக்கு இருக்கும் மதிப்பும், அவன் நினைவால் ஏற்படும் ஆர்வமும் பெரிது. அவனுக்கு முன்னும் பின்னும் இருந்த அரசர், பேரரசர் பலருக்கும் கிட்டாத பெருமை இது. இதற்கு அடிப்படைக் காரணம் அவன் வீர தீர வாழ்வு மட்டுமன்று. மன்னனான பின்பும் அவன் மக்கட் பண்பு மாறாதிருந்தான் என்பதும், மன்னருள்ளும் மக்களுள்ளும் காணுதற்குரிய சீரிய பண்புகள் அவனிடம் இருந்தன என்பதுமே.

ஹைதரைக் கண்டு அவன் எதிரிகள் அஞ்சினர். ஏனெனில்,அவன் அடற்புலியேறு போன்ற வீரமுடையவன். அவனது உட்பகைவர், நயவஞ்சகர் அஞ்சினர். ஏனெனில், அவன் கூரிய நன்மதி அவர்கள் போலிப் பண்புகளை ஒரு கணத்தில் கண்டுகொண்டது. சோம்பித் திரிபவர், சொகுசு வாழ்க்கையினர், கடமை தவறியவர் நடுநடுங்கினர். ஏனெனில், அவன் வீரத்தையும் உழைப்பையும் நேர்மையையும் மட்டுமே மதிப்பவன்; மற்றவர்களிடம் கண்டிப்பும் தண்டிப்பும் தரத் தயங்காதவன். ஆனால், பொதுமக்களுக்கு அவன் நண்பன். எளியவர்களுக்கு இறைவன். போர் வீரர்களுக்கு அவன் வள்ளல். அவர்கள் நலனுக்கு உழைக்கும் உரவோன். அவனைக் கண்டு அத்தகையவர் யாரும் அஞ்சியதில்லை. அஞ்சும்படியான தோற்றமோ இயல்போ, பண்பாடோ செயலோ எதுவும் அவனிடம் இல்லை.

ஹைதர் ஆஜானுபாகு அல்ல. அழகனல்ல. அவன் நடுத்தர உயரமும் கருநிற மேனியும் உடையவன். ஆயினும் அவன் உடல் கட்டுமரம் வாய்ந்தது. கடு உழைப்பால் அது எளிதில் களைப்படைந்ததில்லை. தோல்விகளால் துவண்டதில்லை. உறுதி விடாமுயற்சி ஆகியவற்றின் திருவுருவாக அது திகழ்ந்தது. இவ்வெளிய தோற்றத்துக்கேற்ப அவன் எவருக்கும் எளியவன். எவருடனும் எளிதில் பழகி, இயல்பாக உரையாடி மகிழ்பவன். தென்னாட்டவர்க்கு இயல்பான மீசையையோ, முஸ்லீம்களுக்கு